Karur MP Jothimani Missing :கரூர் எம்.பி ஜோதிமணியை காணவில்லை -போஸ்டரால் பரபரப்பு
கரூர் எம்.பி.யை காணவில்லை என்று கரூர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிமணி தனது 22 வயதில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஜோதிமணி 2011 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலிலும், 2014 இந்திய பொதுத் தேர்தலிலும் கரூரிலிருந்து போட்டியிட்டு இரு தேர்தல்களிலும் தோல்வியடைந்தார். 2019 இந்திய பொதுத் தேர்தலில் அவர் கரூரிலிருந்து காங்கிரஸ் சார்பாக வென்றார்.
தற்போது கரூர் எம்.பி.யாகி உள்ளார். எளிமையான தோற்றத்தை தனது அடையாளமாக கொண்ட அவர் எந்தவொரு பிரச்சினைக்கும் இறங்கி வந்து குரல் கொடுக்கக்கூடியவர். கரூர் தொகுதியில் கடந்த நாடாளுமன்றம் தேர்தலில் சீட் வாங்கி தி.மு.க. கூட்டணியின் பேராதரவுடன் வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில், இவர் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் மோதல், ஆட்சியருடன் மோதல் என்று சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டார். தொடக்கத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வந்த ஜோதிமணி எம்.பி. அதன்பிறகு மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தார்.
ஆட்சியரின் நடவடிக்கைகளை கண்டித்து அவரது அலுவலகத்தில் தனிநபராக பாய் விரித்து படுத்து உறங்கினார். இதனால் அவர் சார்ந்திருந்த காங்கிரசார் முதல் தி.மு.க.வினர் வரை ஜோதிமணி எம்.பி.யை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில்,தற்போது கரூர் எம்.பி.யை காணவில்லை என்று கரூர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் சுவர்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த போஸ்டரில் பயோடேட்டா மாடலில் உள்ளது.
அதில்,
"பெயர்: ஜோதிமணி
பிடித்த இடம்: போலீஸ் வேன், பார்லிமெண்ட் கேண்டீன், வெளிநடப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம் செய்வது
பிடித்த பொழுதுபோக்கு: கலெக்டர் அலுவலகத்தில் படுத்து உறங்குவது, காளாண் பிரியாணி சமைப்பது.
பிடித்தவர்கள்: அண்டோனியா மைனோ, ராவுல் வின்சி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, பிடிக்காத வார்த்தைகள் தொகுதி நலன், மக்கள் வாக்குறுதி, ராமர்கோவில்
பிடித்த நாடு: இத்தாலி
மறந்தது: தான் கரூர் தொகுதி எம்.பி. என்பதை...
காணாமல் போன தினம்: 23 மே (கரூர் எம்.பி.யாக பதவியேற்ற பின்பு) மேலும் பாராளுமன்ற கேண்டீனில் சலுகை விலை பஜ்ஜி, போண்டா சாப்பிட்டதை தவிர, இவரால் தொகுதிக்கு எந்தவித பயனும் இல்லை.
மேலும் நடிகர் தனுஷ் நடித்த கர்ணம் திரைப்படத்தில் கிடக்குழி மாரியம்மாள் பாடிய கண்டா வரச்சொல்லுங்க... அவர கையோடு கூட்டி வாருங்க..." என்ற பாடல் வரியும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாபிக்ஸ்