HBD Kalaignar99: தேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Kalaignar99: தேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு!

HBD Kalaignar99: தேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு!

Karthikeyan S HT Tamil
Jun 03, 2022 03:31 PM IST

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

<p>தேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு</p>
<p>தேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு</p>

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3-ல் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். வளர்த்தெடுத்த ஊர் திருக்குவளை என்றாலும், கருணாநிதியை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த ஊர் திருவாரூர். பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிகம் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். தனது 14ஆவது வயதில் சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பின்நாட்களில் தி.மு.கவின் தொடக்க கால உறுப்பினர் ஆனார். 1969ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மறைவு நாள் வரை 50 ஆண்டுகள் பதவி வகித்து இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பிடித்தார். தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பல விஷயங்களில் வழிகாட்டியாக இருந்துள்ளார்.

<p>கருணாநிதி - நரேந்திர மோடி சந்திப்பு (2007) (கோப்புப்படம்)</p>
கருணாநிதி - நரேந்திர மோடி சந்திப்பு (2007) (கோப்புப்படம்)

1989-1991ஆம் ஆண்டுகளில் வி.பி.சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய முன்னணி ஆட்சி, 1996-1998 ஆம் ஆண்டுகளில் தேவ கெளடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சிகள் அமைந்ததில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு உண்டு. 1996-ல் காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளுமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. மத்தியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார். எனவே கர்நாடகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த தேவ கெளடாவை பிரதமர் பதவி நோக்கி அப்போது நகர்த்தியவர்களில் முக்கியமானவர் கருணாநிதி.

வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, மே தினத்தை இந்தியா முழுவதும் சம்பளத்தோடு கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க வைத்தவர் கருணாநிதி.

1999-2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தி.மு.க.,வும் இடம் பெற்றது. அதன் பின்னர் 2004-2014ல் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகள் அமைந்ததில் கருணாநிதி முக்கிய பங்காற்றினார்.

<p>கருணாநிதி, சோனியா காந்தி மற்றும் தயாநிதி மாறன் (கோப்புப்படம்)</p>
கருணாநிதி, சோனியா காந்தி மற்றும் தயாநிதி மாறன் (கோப்புப்படம்)

காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கூட்டணி அமைய கருணாநிதிதான் காரணமாக இருந்தார். இதனாலேயே சோனியா காந்திக்கு கருணாநிதி மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. இந்த கூட்டணி பத்தாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது. இது தவிர, பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் உள்பட பல குடியரசுத் தலைவர்களைத் தேர்வு செய்ததில் தேசிய அளவில் கருணாநிதிக்கு உள்ள பங்கு குறிப்பிடத்தக்கது. தேசிய அரசியலில் ஆளுநர், மத்திய அமைச்சர் என பல்வேறு உயர் பதவிகள் தேடிவந்தபோதும் 'என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்' என்று மறுத்துவிட்டார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.