Rajbhavan: ’கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்கள்!’ அமைச்சர் ரகுபதி பரபரப்பு ட்வீட்!
“இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது”
ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஜாமீனில் எடுத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் வாயில் முன் நேற்று மாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தை செய்த கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் பின்னர் அளித்த விளக்கத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை ஆளுநர் மாளிகை நோக்கி எறிய முற்பட்டபோது பணியில் இருந்த பாதுகாப்பு போலீசாரால் அவர் தடுக்கப்பட்டார். அப்போது அவர் எறிய முற்பட இரண்டு பாட்டில்கள் வெளிப்புற சாலையில் விழுந்தன. பின்னர், அவர் பாதுகாப்பு போலீசாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். மேலும் அவரிடமிருந்து பெட்ரோல் நிரப்பப்பட்ட இரண்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆளுநர் மாளிகையை சுற்றி எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த செயலில் ஈடுபட்ட கருக்கா வினோத் என்பவர் மீது ஏற்கெனவே பாஜக தலைமை அலுவலகமான கலமாலயத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பெட்ரோர்ல் குண்டு வீசிய வழக்கு உட்பட 14 குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் மாளிகையின் புகாரையே காவல்துறை எடுத்துக் கொள்ளவில்லை என்று ராஜ்பவன் குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஜாமீனில் எடுத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில்,”ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது.
இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.”