Kanimozhi MP: இரட்டை சகோதரிகளை கவுரவித்த கனிமொழி எம்.பி., ஏன் தெரியுமா?
Kanimozhi MP: மாணவிகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆடைகளில் ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தி வருகின்றனர்.
சுற்றுச்சூழல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பள்ளி மாணவிகளான இரட்டை சகோதரிகளை கனிமொழி எம்பி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியான சர்ச் பார்க் பள்ளியின் இரட்டை சகோதரிகளான ப்ரணவி மற்றும் ப்ராப்தி என்ற மாணவிகள் இருவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஆன்லைன் மற்றும் நேரடியாக களப்பணியாகவும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக அவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆடைகளில் ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தி வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தி.மு.கழகச் சுற்றுச்சூழல் அணியின் பொறுப்பாளரும், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி நேற்று மாணவிகள் ப்ரணவி, ப்ராப்தி ஆகிய இருவரையும் சிஐடி காலனியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது அவர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியத்துடன் கூடிய ஆடைகளையும் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் பழ செல்வக்குமார் மற்றும் மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர். சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு போராட்டங்களை நடத்திவருபவரும், அண்மையில் மாநில அரசின் சுற்றுச்சூழல் காப்பாளர் விருது பெற்றவருமான கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியின் மகள்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.