தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi Illicit Liquor Death: 'கள்ளக்குறிச்சியில் மீண்டும் 5 பேர் பலி - அரசு பொறுப்பேற்க வேண்டும்' அண்ணாமலை சாடல்

kallakurichi illicit liquor death: 'கள்ளக்குறிச்சியில் மீண்டும் 5 பேர் பலி - அரசு பொறுப்பேற்க வேண்டும்' அண்ணாமலை சாடல்

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 19, 2024 04:30 PM IST

Kallakurichi illicit liquor death: கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

'கள்ளக்குறிச்சியில் மீண்டும் 5 பேர் பலி - அரசு பொறுப்பேற்க வேண்டும்' அண்ணாமலை
'கள்ளக்குறிச்சியில் மீண்டும் 5 பேர் பலி - அரசு பொறுப்பேற்க வேண்டும்' அண்ணாமலை

Kallakurichi illicit liquor death: கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்திற்கு 5 பேர் பலியாகி உள்ள நிலையில் அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

"கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஐந்து பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பத்து பேருக்கும் மேல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்று தெரிகிறது.

மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் திரு மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் ஐந்து உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்."இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை

கள்ளக்குறிசி கருணாகுளம் பகுதியில் கன்னுகுட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பலமுறை இவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்த காரணத்திற்காக சிறை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக்கில் விலை அதிகம்

தமிழக அரசு மதுபான கடையான டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை அதிகம் என்பதால் கருணாகுளம் பகுதியை ஒட்டி உள்ள ஏராளமானோர் கள்ளச்சாராயத்தை நாடி செல்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை நேற்று இரவு சிலர் வாங்கி குடித்துள்ளனர். இதில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிறு எரிச்சல், கண் பாதிப்பு, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5 பேர் பலி

கள்ளக்குறிச்சி நகர் பகுதியைச் சேர்ந்த கருணாகுளம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தால் சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்த ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கள்ளச் சாராயம் விற்பனை செய்தவரை காவல் துறையினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் மறுப்பு

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாரயத்தால் உயிரிழப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் ஷெகாவத் மறுப்பு தெரிவித்துள்ளர். உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு மதுப்பழக்கமே இல்லை என்றும், மற்ற இருவர் வயிற்று போக்கு ஏற்பட்ட நிலையில் இறந்து விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9