Jallikattu Judgement: ஜல்லிக்கட்டு தீர்ப்பு சமத்துவ மக்கள் கட்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - சரத் குமார்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தர தடை விதித்ததை எதிர்த்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் முதன் முதலாக 07.06.2014 அன்று மதுரை பழங்காநத்தத்தில் மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தோம்.- சரத் குமார்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு வழக்கு
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டத்தை கொண்டு வந்தன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 8ம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஜல்லிக்கட்டு தீர்ப்பு
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று வெளியிட்டனர். அதில், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வு இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.
ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும். தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவது பெருமளவு குறைந்துள்ளது. 100 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் திருப்தியாக உள்ளது.
கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று அரசு சட்டம் இயற்றி உள்ள நிலையில் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் சரத் குமார் அறிக்கை
இது தொடர்பாக அரசியல் கட்சியினர் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். சமத்துவ மகக்ள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில், ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
கடந்த 07.05.2014-ல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தர தடை விதித்ததை எதிர்த்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் முதன் முதலாக 07.06.2014 அன்று மதுரை பழங்காநத்தத்தில் மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தோம். 09.03.2017 அன்று தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தால் தடை நீக்கப்பட்டு போராட்டம் சிறந்த வெற்றி கண்டது.
கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்கள் இயற்றியதற்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த போட்டிக்கு தடை விதிக்க முடியாது என்று வரலாற்று சிறப்புமிக்க உணர்வுப்பூர்வமான தீர்ப்பினை வழங்கியது தமிழர்களுக்கும், வெவ்வேறு விதமான கலாச்சாரத்தை பின்பற்றும் மக்களுக்கும் மகிழ்வளிக்கும் செய்தியாகும்.
தாய் மண்ணின் அடையாளத்தை மீட்க போராடி வெற்றி கண்ட நாம், மது மற்றும் போதையால் ஏற்படும் சமூக சீரழிவை எதிர்த்தும் தொடர்ந்து போராடி, மக்கள் நலனை மீட்டெடுப்பதிலும், சமூகத்தை சீரமைப்பதில் மாபெரும் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கை உதித்துள்ளது.
டாபிக்ஸ்