மார்ச் 20-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்? எதிர்பார்புகளுக்கு முற்றுப்புள்ளி?
Tamilnadu Budget: 2023-24ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் வரும் மார்ச் 15 அல்லது மார்ச் 20ஆம் தேதிகளில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
2023-24ஆம் நிதியாண்டு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்க உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். மேலும் கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் 2ஆவது பணக்கார மாநிலம்
இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வருவாய் மாநிலமான தமிழ்நாட்டின் பட்ஜெட் தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள தொழில் துறையினராலும் உலக முதலீட்டாளர்களாலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கு
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணித்து வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், நடப்பு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வுளவு நிதி ஒதுக்குவது என்ற ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த வாரத்தில் முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் முதல்வர் ஆய்வுக்கூட்டம்
அதன் பிறகு பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை நிதியமைச்சகம் தயார் செய்யும் பணிகளில் ஈடுபடும்.
மார்ச் 2ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாக உள்ளதால் முதல்வரின் ஆய்வுக்கூட்டங்கள் சிறிது ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மார்ச் 3வது வாரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
மார்ச் 20இல் பட்ஜெட்?
மார்ச் 20ஆம் தேதி பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்ச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் பேரவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தமிழ்நாடு முதலமைச்சரின் துறைரீதியான ஆய்வுகளுக்கு பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரின் அதிகாரப்பூர்வ தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.
”இந்த பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்காது”
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ”கடந்த ஆண்டு பட்ஜெட்டிற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்தாண்டு அதுபோல பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. நமது மாநிலம் வளர்ச்சி அடைய புதிய வழிகளை நாம் தேட வேண்டியதே இன்றைய வேலை இதுபோன்ற கருத்தரங்கங்கள் அதற்கு முக்கியமானதாக இருக்கும்" என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்