Savukku Shankar: ‘துணிவு வசூலை எடுத்து பேனா சிலை வைங்க’ சவுக்கு சங்கர் காட்டம்!
Karunanidhi's pen statue: ‘தமிழ்நாட்டில் 8 கோடி மக்களும் கலைஞரை ஏற்றுக்கொள்கிறார்களா? நான் கலைஞரை ஏற்கிறேன், ஆனால் பேனா சிலை எதுக்கு?’ -சவுக்கு சங்கர்
பரபரப்பான அரசியல் கருத்துக்களை முன்வைத்து வரும் சவுக்கு சங்கர், நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, வாரிசு, துணிவு ரிலீஸில் அரசு துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலின் மீது வைத்தார். தொடர்ந்து இணையதளம் ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற சவுக்குசங்கர் பேசியதாவது:
‘உங்க அப்பாவுக்கு சிலை வைக்க, ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து மெரினாவில் சிலை வைப்பீங்க? எனக்கு இப்போதும் கலைஞர் மீது அபிமானம் உண்டு. ஆனால், மக்கள் வரி பணத்தில் பேனா வைக்கும் அளவிற்கு அபிமானம் இல்லை; அது பைத்தியக்காரத் தனம்.
வைங்க, கலைஞர் மீது நீங்க ரொம்ப ப்ரியமா இருந்தால், 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி சொத்து வெச்சிருக்கீங்களே, முரசொலி அறக்கட்டளை, திமுக அறக்கட்டளையில், எடுத்து வையுங்க சிலை!
சித்தரஞ்சன் சாலை வீடு, வேளச்சேரி வீடு, உளுந்தை கிராமத்தில் உள்ள இடத்தை எல்லாம் விற்றுவிட்டு பேனா சிலை வைங்க. கருணாநிதி நாட்டிற்காக என்ன செய்துவிட்டார்? கலைஞரின் பேனா தலை சாயும் போதெல்லாம், தமிழர் தலை நிமிர்வான் என்றால், கலைஞர் இறந்தபின் எல்லா தமிழனும் இறந்துவிட்டானா?
அதிமுகவினர் ஜெயலலிதாவிற்கு அவர்கள் கட்சி அலுவலகத்தில் சிலை வைத்துக் கொண்டார்கள். நீங்களும் உங்க கட்சி அலுவலகத்தில் ஒரு சிலை வைத்து விட்டீர்கள். அரசு செலவில் கலைஞருக்கு ஒரு நினைவிடம் வைத்துவிட்டார்கள். அந்த மரியாதை போதும்; அதொடு நிறுத்திக்கோங்க.
யாரோட பணத்தை எடுத்து பேனா சிலை, பென்சில் சிலை வைக்கிறீங்க? இதெல்லாம் யாரோட பணம்? இவ்வளவு சம்பாதிக்கிறீங்களே, ரெட் ஜெய்ண்ட் கடைசியா பண்ண இரண்டு படத்தோட பணத்தை வெச்சு பேனா சிலை வைங்க. துணிவு படத்தோட வசூலை எடுத்தா, இதை விட பெரிய பேனா சிலை வைக்கலாமே. பேனா என்ன, பால் பாண்ட் சிலையே வைக்கலாமே!
தமிழ்நாட்டில் 8 கோடி மக்களும் கலைஞரை ஏற்றுக்கொள்கிறார்களா? நான் கலைஞரை ஏற்கிறேன், ஆனால் பேனா சிலை எதுக்கு? என்ன கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? அவசியமா இப்போ? கலைஞரின் படைப்புகளை நாட்டுடமை ஆக்கி, அவரை பெருமைபடுத்துங்க. அதில் இருக்கும் காப்பு உரிமை பணம் வேண்டும் என்று தானே செய்ய மாட்டீர்கள்.
100 சதவீம் பேனா சிலையை எதிர்க்கிறேன். அப்புறம் மூக்கு கண்ணாடிக்கு சிலை வைப்பீங்க? தாம்பரம் பக்கம் மஞ்சள் துண்டுக்கு சிலை வைப்பீங்க? விளையாடுறீங்களா? யாரு பணம் இது? பேனா சிலை வைக்கவில்லை என்றால், மக்கள் பீச்சுக்கு வருவதை நிறுத்தி விடுவார்களா?
உங்க அப்பா மீது இருக்கும் ப்ரியத்தை காட்ட விரும்பினால், உங்கள் சொத்துக்களை விற்று சிலை வைங்க; அரசு பணத்தில் வைக்காதீங்க! முரசொலி அறக்கட்டளையில் எவ்வளவு இருக்கு? திமுக அறக்கட்டளையில் எவ்வளவு இருக்கு? அஞ்சுகம் அறக்கட்டளையில் எவ்வளவு இருக்கு?
தமிழ்நாட்டுக்கு கலைஞர் ஆற்றிய பணிக்கு நினைவிடத்திற்கு செலவழித்தது போதும்; நாட்டுக்கு என்ன தியாகம் பண்ணாரு கலைஞர்? சினிமாவில் கதை , வசனம் எழுதி சம்பாதித்த சொத்தா இவ்வளவும்? என்ன தியாகம் பண்ணிட்டாரு?
கோபாலபுரம் வீடு அரசுடையமைக்குறீங்க தானே, அந்தவீட்டை இடித்து விட்டு அங்கு பேன சிலை வைங்க. கடலில் வைக்க கூடாது. பேனா சிலையை கைவிடவில்லை என்றால், மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை சந்திப்பார்கள்,’’
என்று சவுக்கு சங்கர் அந்த விவாதத்தில் பேசியுள்ளார்.
டாபிக்ஸ்