Arjun Sampath: பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் - அர்ஜுன் சம்பத்!
பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் தமிழ்நாடு வளரும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
எவரும் எட்ட முடியாத எட்டாண்டு சாதனை எனப் பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்து விளக்க நூல் ஒன்றை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹச். ராஜா நூலை வெளியிட அதனைத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பெற்றுக் கொண்டார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் சம்பத், தற்போது நடந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. முதலில் தமிழகத்தில் தேசியக்கொடி ஏற்றிய ஓமந்தூரார் தோட்டத்தில் அவரது சிலையோ அல்லது புகைப்படமோ இல்லை. ஆனால் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.
இப்படி வரலாற்றுத் தலைவர்கள் இருந்த எல்லா இடங்களிலும் பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் சிலைகள் பெரிது பெரிதாக வைக்கப்படுகிறது. இதனைப் பொம்மை நாடாகப் பார்க்கின்றனர்.
காங்கிரசைச் சேர்ந்த ராகுல் காந்தி தியாகிகளின் நினைவிடத்திற்குச் செல்லவில்லை வாரிசுகளைச் சந்திக்கவில்லை ஆனால் மிஷனரிகள் நடத்தும் இடங்களுக்கு மறக்காமல் சென்று விடுகிறார். தமிழகத்திலிருந்து தேவையில்லாமல் 39 எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் மத்திய அரசின் திட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலை மாற வேண்டுமென்றால் 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தில் போட்டியிட வேண்டுமென நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். அப்போதுதான் பாஜக வசம் 40 தொகுதிகளும் வரும் நமது தமிழகம் வளரும்" எனத் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்