தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வீடுகளை இடிக்க உத்தரவு - அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வீடுகளை இடிக்க உத்தரவு - அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

I Jayachandran HT Tamil
Jul 02, 2022 08:13 AM IST

மதுரையில் அரசு ஊழியர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை பாதுகாப்புக் கருதி தமிழக அரசு இடிக்க முடிவு. இதனையடுத்து ஒரு மாதத்துக்குள் வீடுகளைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், அங்கு குடியிருக்கும் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிதிலமடைந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு
சிதிலமடைந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

மக்கள் வாழத் தகுதியற்ற சிதிலமடைந்த 7 ஆயிரத்து 500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

மதுரையில் அரசு ஊழியர்களுக்காக சொக்கிகுளம், ரேஸ்கோர்ஸ் காலனி, டிஆர்ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் 40 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் பழமையானவையாகும். இந்த வீடுகளில் பெரும்பாலானவை சிதிலடைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மதுரை வீட்டு வசதிப் பிரிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், மதுரை சொக்கிகுளம் காலனியில் அமைந்துள்ள 132 அரசு அலுவலர்களுக்கான வாடகை குடியிருப்புகளில் ஏ, பி, சி மற்றும் டி பிளாக்குகளில் உள்ள வீடுகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு செய்து 'குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளதால் மேற்படி குடியிருப்புகளை இடிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' எனவும், தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கடந்த மே 18-ஆம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இக்குறிப்பிட்ட பிரிவு குடியிருப்புகளை இடிக்க உத்தரவிட்டுள்ளது எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து அக்குறிப்பிட்ட குடியிருப்புகளில் வசிப்போர் தங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கருதி இவ்வறிக்கையைப் பெற்ற ஒரு மாதத்துக்குள் காலி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

வீட்டு வசதி வாரியத்தின் இந்த உத்தரவால் குடியிருப்புவாசிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மேற்காணும் குடியிருப்புகள் 40 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் பழமையானவையாகும். தற்போது பெரும்பான்மையானவர்கள், 20 ஆண்டுகள் பழமையான குடியிருப்புகளில்தான் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புகளில் எந்தவித அசௌகரியங்களும் இக்கட்டடத்தால் ஏற்படவில்லை. ஒரு மாத காலத்துக்குள் வீட்டைக் காலி செய்வது இயலாத காரியம். தற்போது, வீட்டின் அமைவிடத்துக்கு அருகில் உள்ள பள்ளிகளிலேயே குழந்தைகள் அனைவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வீட்டு வசதி வாரியத்தின் வேறு குடியிருப்புகளிலும் இதே பணிகள் நடைபெறவுள்ளதால் அங்கும் செல்ல முடியாத நிலை. இங்கு வசிப்போர் அனைவரும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆகையால் பழுதடைந்துள்ள 40 ஆண்டுகள் பழமையான வீடுகளை முதலில் புனரமைத்துவிட்டு, அதில் எங்களைக் குடியேற்றிய பின்னர் பிற வீடுகளை புனரமைப்பதுதான் சரியாக இருக்கும்' என்கின்றனர்.

மேலும் ஆனி, ஆடி மாதங்களில் பொதுவாக வீடுகள் காலியாவதில்லை. புதிய வீடுகளுக்கும் ஐதீகம் கருதி குடிபெயர்வதும் கிடையாது. ஆகையால் ஒரு மாத கால இடைவெளியில் அரசு ஊழியர்கள் தாங்கள் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்வது இயலாத ஒன்றாகும். ஆகையால் தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்