RN Ravi: கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இறையன்புவிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rn Ravi: கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இறையன்புவிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

RN Ravi: கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இறையன்புவிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

Kathiravan V HT Tamil
May 17, 2023 07:55 PM IST

கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறவில்லை எனில் ஏன் இத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல்

தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு - ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு - ஆளுநர் ஆர்.என்.ரவி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 14 பேரும் செங்கல்பட்டில் 8 பேரும் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சமும், மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு 50ஆயிரமும் நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

மேலும் இதன் எதிரொலியாக தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்த நிலையில், மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் ஆகும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருந்தார். மேலும் கண்காணிக்கப்படுவதாலும், சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில் ,தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும், தொழிற்சாலையிலிருந்து, விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தத் தொழிற்சாலையிலிருந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது, அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது என்றும் டிஜிபி தெரிவித்திருந்தார்.

கள்ளச்சாரய மரணத்தின் எதிரொலியாக விழுப்புரம் எஸ்.பி.ஸ்ரீநாதா மற்றும் மதுவிலக்கு தடுப்பு காவல் பிரிவின் டிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், 22 பேர் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றப்பட்டது. மேலும் செங்கபட்டு ஆட்சியர், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்திருந்தது.

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்திய ஆய்வுக்கூட்டத்தில்,

மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில், கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில், மாவட்ட அளவிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாகச் செயல்படும் உயரதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அரசின் பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் பயன்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், இதனை உள்துறைச் செயலாளர் கண்காணித்திட வேண்டுமென்றும் ஆணையிட்டதுடன், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது குறித்து இதுவரை எடுக்கப்பட்ட விவரங்கள் என்ன?, இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?. கள்ளச்சாராயம் எப்படி விற்பனை செய்யப்படுகிறது? கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறவில்லை எனில் ஏன் இத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பன போன்ற விவரங்களை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்புவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.