Dengue Fever : முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி!
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெங்கு அபாயம் அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்தான நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொசுக்கடியால் ஏற்படும் டெங்கு ஒரு தீவிர நோய், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது எல்லா நாடுகளிலும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொசுக்களின் மூலம் பரவும் இந்த காய்ச்சலில், நமது இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவி வருகின்றன. தமிழக அரசு சார்பில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த முகாம்களில் யாருக்கெனும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கமணிக்கு கடந்த சில நாட்களாக உடல் சோர்வாக காணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான சிகிச்சையோடு சில நாட்கள் ஓய்வெடுக்கும்படியும் அவருக்கு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட மருத்துவரும், மெட்ராஸ் ENT ஆராய்ச்சி மையத்தின்தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன.
அதனையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், அவருக்கு வைரல் ஃப்ளூ (viral flu) காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால், முதல்வர் காய்ச்சலுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்