Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நிகழ்ந்த கல்குவாரி வெடிவிபத்துக்கான காரணம் குறித்து எப்ஐஆர் பதிவு மூலம் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரைச் சேர்ந்த சேது மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் நேற்று வழக்கம் போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது, திடீரென வெடிவிபத்து நிகழ்ந்தது. குவாரியில் உள்ள வெடிமருந்து கிடங்கில், வெடிபொருட்களை வேனிலிருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்த போது திடீரென வெடிபொருட்களில் உராய்வு ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த ஆவியூர் போலீஸார் மற்றும் மதுரையில் இருந்து வந்த வெடிகுண்டு தடுப்புபிரிவு நிபுணர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோரும் விசாரணை நடத்தினர்.
இந்த பயங்கர வெடி விபத்தின் போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் கந்தசாமி (47), துரை (25), குருசாமி (60) ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் ஒரு கி.மீ. வரை உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன. மேலும், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு முழுவதுமாக தரைமட்டமானது. இந்த விபத்தில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.