Liqer Death: ’பாஜக ஆளும் மாநிலங்களிலும் கள்ளச்சாராய மரணங்கள் நடக்கத்தான் செய்கிறது’ கி.வீரமணி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Liqer Death: ’பாஜக ஆளும் மாநிலங்களிலும் கள்ளச்சாராய மரணங்கள் நடக்கத்தான் செய்கிறது’ கி.வீரமணி

Liqer Death: ’பாஜக ஆளும் மாநிலங்களிலும் கள்ளச்சாராய மரணங்கள் நடக்கத்தான் செய்கிறது’ கி.வீரமணி

Kathiravan V HT Tamil
May 17, 2023 04:32 PM IST

பா.ஜ.க. காவிகளும், இந்த ‘கான கோஷ்டி’யில் இணைந்துள்ளார்களே அவர்களது குஜராத் ஆட்சியிலும், (உ.பி.யில் அண்மையில்) 40 பேர் உயிர் பலிக்கு ஆளானபோது, குஜராத் முதலமைச்சர் ராஜினாமா செய்தாரா? - கி.வீரமணி கேள்வி

<p>திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி</p>
<p>திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி</p>

கள்ளச் சாராய சாவு - ஓர் அரசியல் மூலதனமா?

இதை ஓர் ‘‘அரசியல் மூலதனமாக்கி’’ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், அவரது கட்சியினரும் இதற்காகக் கதறிக் கண்ணீர் வடித்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று ‘கோரசும்‘ பாடுகிறார்கள். இவர்கள் யாருக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்?

மறைந்த உயிர்களுக்காக, மனிதர்களுக்காக அவரது குடும்பத்தினருக்காக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, ஏழைக் குடும்பங்கள் நிராதரவுடன் தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கருணை உள்ளத்தோடு - நிதி உதவியும் (10 லட்சம் ரூபாய்) செய்துள்ளார்.

அரசியல் செய்வோரை நோக்கி சில கேள்விகள்!

இத்தகைய மரணம் அடைந்தவர்களுக்கு அரசு நிதி உதவி ஏன்? என்று சட்டப்படி சிலர் கேள்வி கேட்டாலும்கூட, இதில் மனிதநேயத்தையும், அந்த ‘ஓடப்பர்’களான ஏழையப்பர்கள் குடும்பப் பாதுகாப்பு அம்சத்தையுமே முதன்மையாகக் கவனிக்கவேண்டும்.

முதலமைச்சரை - ராஜினாமா செய்யச் சொல்லும் அறவழிப்பட்ட உரிமை (தார்மீக) இவர்கள் எவருக்காவது உண்டா, நியாயப்படி?

நாட்டு நடப்பில் கள்ளச்சாராயம் அல்லது விஷச் சாராயம் குடித்து சாவது இந்த ஆட்சியில் மட்டும்தான் நடந்திருக்கிறதா?

(நாம் மரணமடைந்த உயிர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை - மனிதநேயத்தோடு மிகவும் துயரமும், துன்பமும் அடைகிறோம் என்பது ஒருபுறமிருந்தாலும்).

இதை வைத்து ‘‘அரசியல் செய்ய முனையும் அரசியல் கபட வேடதாரிகளை நோக்கிக் கேட்கும் கேள்விகளுக்கு, அவர்கள் மனச்சாட்சியோடு பதிலளிக்க முன்வருவார்களா?

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கள்ளச்சாராயம் குடித்து மரணித்தவர்களின் நீண்ட பட்டியல் உண்டே!

முன்பு ஜெயலலிதா அம்மையார் ஆட்சி செய்த காலத்தில், 2001 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கள்ளச்சாராயத்திற்கு 52 பேர் பலியாகியதோடு, 200-க்கும் மேற்பட்டோர் வாழ்க்கையோடு போராடிய பிறகு, சாவு எண்ணிக்¬யும் கூடியதே, அப்போது அவர் அதற்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாரா? 30 பேருக்குமேல் கண் பார்வை பறிகொடுத்த பரிதாபமும் நிகழ்ந்ததே! (2001).

அதே ஆண்டில் காஞ்சிபுரம் அருகேயும், ரெட்ஹில்ஸ் அருகே கோட்டூர் கிராமத்திலும் கள்ளச் சாராய சாவுகள் 30 பேருக்குமேல் நிகழ்ந்தபோதும், எத்தனை முறை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்?

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராய சாவுகள்!

பா.ஜ.க. காவிகளும், இந்த ‘கான கோஷ்டி’யில் இணைந்துள்ளார்களே அவர்களது குஜராத் ஆட்சியிலும், (உ.பி.யில் அண்மையில்) 40 பேர் உயிர் பலிக்கு ஆளானபோது, குஜராத் முதலமைச்சர் ராஜினாமா செய்தாரா?

பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் சொந்த மாநிலம்; ‘குஜராத் மாடல்’பற்றி உரக்க முழங்கிய மாநிலம்!

அப்போது திறக்காத இவர்களது வாய்கள், இப்போது மட்டும் ஏன் அகலமாகத் திறக்கின்றன என்பது புரியவில்லையா?

இந்த ‘அரசியல் கிளிசிரைன்’ அழுகையாளர்கள் மனிதநேயத்தால் அழுவதுபோன்ற நடிப்புச் சுதேசிகளாகி உள்ளனர்!

தமிழ் மக்களுக்கு நன்கு இது புரியும்!

நாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தோடு இப்பிரச்சினையை அணுகி அலசிப் பார்த்தால், மதுவிலக்கு அமலில் இல்லாத நிலையில், டாஸ்மாக்குகள் உள்ள நிலையில், நமது ‘‘குடி’’மக்கள் இப்படி மலிவாக உயிரை பலியிடுகின்றார்களே - இது நியாயமா? காவல்துறையில் கருப்பு ஆடுகளின் ‘‘மாமூல்’’ ராஜ்ஜியம் சிறகை விரிக்கிறதே என்று இதை (டாஸ்மாக்கை) ஒழித்தால், விளைவு எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது!

ஓர் ஒருங்கிணைப்பு -புதிய திட்டத்தை உருவாக்கலாம்!

கிராம அதிகாரிகள், ஊராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் அத்துணைப் பேரின் கூட்டுப் பொறுப்பில் இப்பிரச்சினையை விட்டு, காவல்துறையின் ஒருங்கிணைப்போடு ‘‘ஒரு புதிய திட்டம்‘’ வகுக்கப்பட வேண்டும். மது விலக்கு - விஷச் சாராயம், கள்ளச்சாராய ஒழிப்பையும் ஒரு மக்கள் இயக்கமாக (மதுவிலக்குப் பிரச்சாரமும் இன்னொரு பக்கம் தேவை) - கட்சிக் கண்ணோட்டமின்றி குழுக்கள் அமைத்து, ஊரில் செல்வாக்குள்ளவர்களை இதற்குப் பொறுப்பாக்கி, ஆண்டுதோறும் இதுபோன்ற குற்றமற்ற கிராமங்களுக்குப் பரிசுகள் வழங்கும் திட்டத்தையும் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் யோசிக்கவேண்டும்.ஒரு புது அணுகுமுறை இதற்கு உடனடியாகத் தேவை! தொலைநோக்குத் திட்டமாக அது அமையட்டும்! என தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.