Seeman: ’TNPSC பொறியியல் தேர்வை ஒத்திவையுங்கள்!’ சீமான் வேண்டுகோள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman: ’Tnpsc பொறியியல் தேர்வை ஒத்திவையுங்கள்!’ சீமான் வேண்டுகோள்!

Seeman: ’TNPSC பொறியியல் தேர்வை ஒத்திவையுங்கள்!’ சீமான் வேண்டுகோள்!

Kathiravan V HT Tamil
Jan 01, 2024 02:14 PM IST

“தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமானது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள 369 பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை ஒத்திவைக்காமல் அவசரகதியில் ஜனவரி 6 ஆம் தேதியே நடத்த முடிவெடுத்திருப்பது தேர்வர்களிடையே பதற்றத்தையும், பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது”

சீமான்
சீமான்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பொருட்சேதத்தால் மக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்புக்கு ஆளானதோடு, முக்கிய அரசு ஆவணங்கள், அடையாள அட்டைகள், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றையும் பறிகொடுத்துள்ளனர்.

இத்தகைய நெருக்கடி மிகுச்சூழலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமானது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள 369 பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை ஒத்திவைக்காமல் அவசரகதியில் ஜனவரி 6 ஆம் தேதியே நடத்த முடிவெடுத்திருப்பது தேர்வர்களிடையே பதற்றத்தையும், பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட கனமழை வெள்ளப் பாதிப்புகளைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்று இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசே வலியுறுத்தும் அளவிற்கு மிக மோசமான பாதிப்புகளை தமிழ்நாட்டு மக்கள் சந்தித்துள்ள நிலையில், அவசர அவசரமாக பொறியாளர்கள் பணித்தேர்வினை அரசுத் தேர்வாணையம் நடத்துவது ஏன்? பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு பல்வேறு அரசுப் பணித்தேர்வுகள் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொறியாளர் பணித் தேர்வினை மட்டும் ஒத்தி வைக்க தமிழ்நாடு அரசு மறுப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, கனமழை வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராதச் சூழலில் சனவரி மாதம் அவசரகதியில் நடைபெறவுள்ள பொறியாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வினை ஒத்தி வைக்கும் அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினை வெளியிடச் செய்து, தேர்வர்களின் நலன் காக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.