Tasmac Closed: 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு - எங்கு தெரியுமா?
Erode by-election : ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்றக் கூட்டணியின் சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க வேட்பாளராக இரட்டை இலைச் சின்னத்தில் தென்னரசும் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத்தேர்தல் திமுகவுக்கு கெளரவப் பிரச்னையாகவும், அதிமுகவுக்கு வலிமையை நிரூபிக்கும் களமாகவும் கருதப்படுவதால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து 10-க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்களும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அரசு உத்தரவின்படி வருகிற 25ஆம் தேதி காலை 10 மணி முதல் வருகிற 27ஆம் தேதி வரை, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் செயல்படும் அனைத்துவித டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும். அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினங்களில் மதுவிற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்