காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவேண்டும் - இபிஎஸ்
இனியாவது முதல்வர், தமிழகக் காவல் துறையினை சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: திமுக ஆட்சியில் காவல்துறை செயலற்று கிடக்கிறது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”வெளி மாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு வந்து கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் செல்கின்றனர் என்று, ஏற்கெனவே நான் எனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டு, குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
இந்த விடியா திமுக அரசு பதவியேற்பதில் இருந்தே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அழிந்துள்ளது என்று நான் பலமுறை சட்டமன்றத்திலும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாகவும் தொடர்ந்து கூறி வந்தேன். மேலும், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவேண்டும் என்றும் தொடர்ந்து முதல்வரை வலியுறுத்தி வந்தேன். ஆனால் தொடர்ந்து காவல் துறையை சட்டப்படி நடக்க அனுமதிக்காமல், தங்களின் ஏவல் துறையாகவே பயன்படுத்தி வருகிறது.