DMK vs ED: கதிர் ஆனந்த் கழுத்தில் கத்தி! அமலாக்கத்துறை நோட்டீஸுக்கு இன்று ஆஜர் ஆவாரா?
”தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கதிர் ஆனந்தை நேரில் ஆஜராக சொல்லி அழைத்திருக்கிறது அமலாக்கத்துறை”
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்தை விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக சொல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள நிலையில், அவர் ஆஜர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சியிலும், ஆட்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சீனியர் அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன். இவரது மகனான கதிர் ஆனந்த் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்போது துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்துக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில் கணக்கல் வராத 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதக்ல் செய்யப்பட்டது. அவருக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 11.55 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யபப்ட்டது.
இதில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடைபெற்றதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கதிர் ஆனந்தை நேரில் ஆஜராக சொல்லி அழைத்திருக்கிறது அமலாக்கத்துறை.
ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் மணல் விற்பனை மூலம் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் துரைமுருகனின் கட்டுப்பட்டில் உள்ள அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.
இந்த நிலையில் அவரது மகனான கதிர் ஆனந்தை இன்று விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி உள்ள நிலையில் அவர் ஆஜர் ஆவாரா அல்லது வேறு காரணங்களை சொல்லி ஆஜராக மறுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கெனவே அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் பொன்முடி வீட்டிலும் சோதனையை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.