மக்களின் உயிரோடு விளையாடும் மக்கள் நல்வாழ்வுத் துறை - இபிஎஸ்!
வெற்று விளம்பரத்திற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு, முதல்வரை வைத்து 'போட்டோ ஷூட்' நடத்திவிட்டு, மக்களை, மருத்துவத்தைத் தேடி அலைய வைக்கும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை : மக்களை தேடி மருத்துவம்' என்ற செயல்படாத திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வாதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாண்புமிகு அம்மாவின் அரசால் “அம்மா மினி கிளினிக்” என்று ஆரம்பிக்கப்பட்டு, சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளுக்கு அருகே உள்ள “அம்மா மினி கிளினிக்”களுக்குச் சென்று மருத்துவ உதவி பெற்று வந்த ஒரு அற்புதமான திட்டத்தை, மக்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கி, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற ஒரு பயன் இல்லாத திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு பிரமாண்டமாய் ஒரு தொடக்க விழாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த விடியா திமுக அரசு நடத்தியது. தற்போது அந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று தமிழக மக்களுக்குத் தெரியவில்லை.
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் மருத்துவர்கள்/மருத்துவப் பணியாளர்கள், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களுக்கு மாதம் தோறும் மருந்து, மாத்திரைகள் தர இருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
