Nellai Mayor Election:நெல்லை மேயர் தேர்தல்; தலைமை நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக வாக்களித்த கவுன்சிலர்கள்! நடந்தது என்ன?
Nellai Mayor Election: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக திமுகவைச் சேர்ந்த கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மநகராட்சி மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்யப்பட்டதை அடுத்து, புதிய மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.
நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா
நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்களை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இது தொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் அமைச்சர் தங்கம் தென்னரசு பஞ்சாயத்து செய்தும் திமுக கவுன்சிலர்கள் பிடிவாதமாக இருந்தனா்.
மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி ஆணையாிடம் கடிதம் அளித்தனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் திமுக கவுன்சிலர்களை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினர். ஆனால், தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு நிலவிய நிலையில், மேயராக இருந்த சரவணனை திமுக தலைமை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தது. அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.