DMK Vs BJP: வடைக்கு போட்டியான வாழைப்பழம்.. கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம்
போராட்டத்தின் போது வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க காவல்துறை அனுமதி மறுத்ததது. இதனால் அந்த வாழைப்பழங்களை பா.ஜ.கவினரே சாப்பிட்டனர்.

கோவை சிவானந்தா காலனியில், திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களுக்கு வாழைப்பழம் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக கூறி பா.ஜ.கவினல் வாழைபழத்துடன் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க காவல்துறை அனுமதி மறுத்ததது. இதனால் அந்த வாழைப்பழங்களை பா.ஜ.கவினரே சாப்பிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயிலேயே வடை சுடுகிறார் என தொடர்ந்து தமிழகத்தில் சில அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல கட்டமாக திமுகவினர் உளுந்த வடை வழங்கி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையிலும் பல்வேறு இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடி புகைப்படத்துடன் உளுந்த வடை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக சார்பில் வாழைப்பழம் கொடுக்கும் நூதன பிரச்சார இயக்கம் நேற்று கோவையில் நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனியில் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கையில் வாழைப்பழத்துடன் திரண்டனர்.
ஆனால் போலீசார் வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுத்தனர். அப்படி வழங்கினால் கைது செய்ய நேரிடும் என கடுமையாக எச்சரித்தனர். இதனையடுத்து பா.ஜ.கவினர் முதல்வர் ஸ்டாலின் முகமூடியையும், கையில் வாழைப்பழத்துடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
