RS Bharathi Speech: ‘திமுகவில் ஜீரணித்து தான் இருக்கணும்’ ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
‘போனவர்கள் சிலர் திரும்ப வரும்போது அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. எனக்கும் தான். துரோகம் பண்ணிட்டு குத்திட்டு போனவன் எல்லாம் புதுசா வந்து கொஞ்சுவான். கொஞ்சுவதை அவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்; நானும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்’ -ஆர்.எஸ்.பாரதி
மறைந்த திமுக முன்னாள் எம்.பி., ஜின்னாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. திமுகவில் பதவி பற்றி அவர் பேசிய முழு பேச்சு இதோ:
‘‘நானும் ஜின்னாவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்க கொண்டு வந்து சேர்த்தவன் எல்லாம், மந்திரியாகிட்டான், எம்பி., ஆகிட்டான்; அதுவேறு விசயம். எங்களுக்கு கால தாமதமாக தான் பதவி வந்தது. காரணம், ஒரே கொடி , ஒரே தலைவர் என்று பொறுமையாகஇருந்த காரணத்தனால், என்றாவது ஒரு நாள் பதவி வந்தே சேரும் என்பதால் தான்.
எனக்கு 69 வயதில் தான் எம்.பி., பதவி கிடைத்தது. ஜின்னாவுக்கு 70 வயதில் தான் எம்.பி. பதவி கிடைத்தது. இன்று நான் சொல்வதற்கு காரணம், இளைஞர்கள். இன்று வந்திருக்கும் இளைஞர்கள் எல்லாம், நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம், அரசு பதவி கிடைக்கவில்லை, எங்களை எல்லாம் ஒதுக்கிட்டாங்க என்கிறார்கள்.
ஒதுக்குவாங்க; அப்படி தான் நடக்கும். அதெல்லாம் ஜீரணித்து தான் இந்த கட்சியில் இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு தான் இவர் பாடமாக இருக்கிறார்; படமாக இல்லை. ஜின்னாவை போன்றவர்கள் நமக்கு பாடம். ஒரு கட்சிக்கு வந்துவிட்டால், இறுதிநாள் வரை பதவி வருகிறதோ இல்லையோ இல்லையோ கட்சிக்கு விஸ்வாசமாக இருப்பவன் தான் உண்மையான தொண்டன். அதை விட பெரிய கிரடிட் தேவையில்லை.
கடைசி வரை திமுகவின் தொண்டர் என்று சொல்வது தான் பெருமையே தவிர, வேறு பெருமை இல்லை. ஆழமான நம்பிக்கையை நானும், ஜின்னாவும் பெற்றிருந்தோம். அதுபோல எல்லோரும் நம்பிக்கை பெற வேண்டும்.
இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் இருக்கிறது. நாங்கள் மனம் விட்டு பேசக்கூடியவர்கள். நீண்ட நாள் பழகியவர்கள். எங்களுடன் ஆரம்ப காலத்தில் இருந்த இருவர் தான் இப்போது இருக்கிறார்கள்.
ஜின்னா அடிக்கடி சொல்வார், ‘நம் உடன் இருந்தவர்களில் இப்போது துரை(துரைமுருகன்) , செல்வம் , நீ , நான், மிசா தான் இருக்கிறோம். மற்றவர்கள் வந்தார்கள், போனார்கள்,’ என்பார். போனவர்கள் சிலர் திரும்ப வரும்போது அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. எனக்கும் தான்.
துரோகம் பண்ணிட்டு குத்திட்டு போனவன் எல்லாம் புதுசா வந்து கொஞ்சுவான். கொஞ்சுவதை அவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்; நானும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அது எங்கள் ரத்தத்தில் ஊறி போய்விட்டது.
இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்து விட்டுபோன போதெல்லாம், குறிப்பாக கோபால் சாமி பற்றி சொன்னார். மிகப்பெரியநெருக்கடி அப்போ. கலைஞர் உடன் வழக்கறிஞர் எல்லாரும் அமர்ந்து போட்டோ எடுத்து அனைத்தையும் ஆவணப்படுத்தியதால் தான், திமுகவும், சின்னமும் காப்பாற்றப்பட்டது. இதை யாரும் மறந்துவிடக்கூடாது.
அந்த சமயத்தில் ஜின்னா, அடிக்கடி அறிவாலம் வருவார். மற்ற நேரங்களில் அவர் அவ்வளவாக வரமாட்டார். சோதனையான நேரத்தில் வந்து நிற்பார். தலைவரே அவரை பார்த்து வெட்கப்பட்டு சொல்வார், ‘இவனுக்கு எல்லாம் ஒன்னுமே செய்யவில்லை; ஒரு வருடம் மிசாவில் இருந்தான்’ என்பார்.
ஒவ்வொரு முறையும், இவர் பெயர் பட்டியலில் போகும், ஆனால், இறுதியில் மிஸ் ஆகிவிடும். ஆனாலும், கடைசி வரை தலைவர் மனதில் இடம் பிடித்திருந்த காரணத்தால் தான், 2006 ல் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அவருக்கு எம்.பி., பதவி வழங்கப்பட்டது. அவர் இன்று இல்லை; அவரது குடும்பத்தினருடன் நாங்கள் இறுதி வரை இருப்போம். ஜின்னாவின் குடும்பம், திமுகவின் குடும்பம்.
அவர் இருக்கும் போது எப்படி கட்சி அலுவலகம் வந்தாரோ, அது போல அவரது குடும்பத்தாரும் வர வேண்டும்,’’
என்று ஆர்.எஸ்.பாரதி அந்த நிகழ்வில் பேசினார்.
டாபிக்ஸ்