2 Years Of DMK Govt : ‘சொன்னார்களே.. செய்தார்களா?’ திமுக ஆட்சியின் வாக்குறுதியும் நிறைவேற்றமும்!
திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவு அடைந்த நிலையில் நிறைவேற்றபடாத வாக்குறுதிகளில் சிலவற்றை இதில் காண்போம்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் இரண்டாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. திமுக தேர்தல் வாக்குறுதிகளாக 500 அறிவித்தது. அதில் முக்கிய வாக்குறுதிகள் என்ன என்பது குறித்தும் அவற்றை நிறைவேற்றினார்களா என்பது குறித்தும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் இதில் காண்போம்.
தேர்தல் வாக்குறுதியில், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி உயர்த்தவில்லை. ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றார்கள் அதையும் செய்து தரவில்லை. அ.தி.மு.க தான் ஏற்கனவே விவசாய கடன்களை ரத்து செய்தது. தி.மு.க. விவசாய கடன்களை ரத்து செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும், வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடுகின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலைவாய்ப்பு வழங்கப்படும், 3 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேறவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், 80 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கவும், மத்திய அரசுக்கு இணையான ஊதிய வழங்கவும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்களுக்கு தேர்தல் காலத்தில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது வரை தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. சரண்டர் ஒப்படைப்பு தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படி நிறுத்தி வைப்பது போன்ற பல்வேறு நலன்களை ஆசிரியர் கூட்டமைப்பு எதிராக அரசு செயல்பட்டு கொண்டிருக்கின்றது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநிலத் தலைவர் மணிமேகலை குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பெண் ஒருவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும் அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படுவதாகக் கூறிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. கேட்டால் நிதிநிலை சரியில்லை என்று கூறுகிறார்கள்.
முன்பு அனைவருக்கும் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே என்று கூறுகிறார்கள். தங்க நகைக் கடனை அடைப்பதாகக் கூறினார்கள். அதையும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
நிறைவேற்றபடாத வாக்குறுதிகளில் சிலவற்றை காண்போம்
- 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி உயர்த்தவில்லை.
- ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை.
- விவசாய கடன்களை ரத்து செய்யவில்லை.
- கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை.
- பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 மட்டும் குறைத்து விட்டு தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- வாக்குறுதியில் மதுபான கடைகள் 500 கடைகளை அடைப்போம் என்று கூறினர். 96 மதுபான கடைகளை அரசு இதுவரை மூடப்பட்டுள்ளது. இது போக 500 மது கடைகளில் மூடுவதற்கான முயற்சியில் இருப்பதாக சில தினம் முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
- சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில் இன்றளவும் நிறைவேற்றவில்லை.
- மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் எனக் கூறிய நிலையில் இன்னும் அமல்படுத்தபடவில்லை.
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில் இன்றளவும் நிறைவேற்றவில்லை. இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
- ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என அறிவித்த நிலையில் இன்றும் செயல்படுத்தபடவில்லை.
- ஆண்டுக்கு 10 லட்சம் தனியார் வேலைவாய்ப்பு வழங்கப்படும் மற்றும் 3 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் தேர்தல் வாக்குறுதியை திமுக அறிவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுவிட்டனவா, 7 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டனவா என்பதை தமிழ்நாடு அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
- மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தநிலையில் இன்றளவும் நிறைவேற்றவில்லை.
திமுக தேர்தல் வாக்குறுதிகள் சில
- ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
- வேலையில்லா பட்டதாரிகள் குறு தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
- சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
- இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும்
- கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரும் வரை சொத்துவரி உயர்த்தப்படாது.
- இந்து ஆலயங்களை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய்ஒதுக்கீடு.
- தேவாலயங்களைச் சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
- பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்.
- தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்.
- விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
- பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை
- பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்கு தீர்வு.
- மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ. 24,000-ஆக உயர்வு.
- மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
- பள்ளியில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்.
- கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை.
- மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் அமைக்கப்படும்.
- பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்குப் பால் வழங்கப்படும்.
- உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.
- கூட்டுறவு நகைக் கடன் 5 பவுன் வரை தள்ளுபடி; மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி.
- வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
- திமுக-வின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற தனி அமைச்சகம்
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு.
- நகரங்களில் ஆட்சேபம் இல்லாத இடங்களில் வீட்டுப் பட்டா.
- நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும்.
- தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வரப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- சிறு, குறு விசாயிகளின் மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்.
- கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
- சைபர் காவல் நிலையங்கள் செயல்படுத்தப்படும்.
- பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.
- பொங்கல்விழா மாபெரும் பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்படும்.
- பெண்கள் இட ஒதுக்கீடு 40%-ஆக அதிகரிக்கப்படும்.
- ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.
- உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
- நீட் தேர்வை ரத்து செய்ய முதல் பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்.
- பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
- அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம்.
- மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.
- இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்.
- அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி பணி நியமனம்.
- சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக நியமனம் செய்யப்படுவர்.
- அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.
- நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.