தீர்ப்பு எதிரொலி! படிவத்தை விநியோகிக்கும் EPS அணி! OPS அணிக்கும் தர ஏற்பாடு
”உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டு நாளை இரவுக்குள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல்”
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்யும் நோக்கில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகக்த்தில் வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டு தரப்பை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் அனுப்பப்பட்டு உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டு நாளை இரவுக்குள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஈரோடு கிழக்கில் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசுவும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவரும் தனித்தனியாக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விரும்பும் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வேட்புமனுத்தாக்கல் படிவம் மற்றும் படிவம் ஏ, பி ஆகிய படிவங்களில் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் கையெழுத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.
இதனால் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவும், இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி இடைக்கால மனு ஒன்றிணை டெல்லி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இது தொடர்பான விசாரணையின்போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதே போல் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் நேற்று முன் தினம் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மேற்கண்ட இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹெச்.ராய் ஆகியோரது தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “எடப்பாடி பழனிசாமியை நாங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை.
அதே நேரத்தில் இரட்டை இலை சின்னத்தையும் முடக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்ஜெட்டத்தில் சின்னத்ஹ்டை அவர்கள் பயன்படுத்திகொள்ளலாம். மேலும் பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை” என்றார்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,அதிமுகவை பொறுத்தமட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியில் பொதுக்குழுவே வேட்பாளரை முடிவு செய்யும். மேலும் பொதுக்குழு கூட்டப்படும் போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உட்பட ஆகியோர் கலந்து கொள்ளலாம்.
நேரமின்மை காரணமாக ஒரு வேளை பொதுக்குழுவை திடீரென கூட்ட முடியவில்லை என்றால் வேட்பாளர் பெயரை சர்குலேஷன் முறையில் அதாவது தீர்மானத்தை சுற்றுக்கு விட்டு முடிவு செய்யலாம்.
இதையடுத்து இறுதி செய்யப்படும் வேட்பாளரின் பெயரை கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவு ஈரோடு கிழக்கு இடைதேர்தலுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என உத்தரவிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.
டாபிக்ஸ்