Dheeran Chinnamalai : சுதந்திர போராட்ட வீரர், மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட தினம் இன்று!
Dheeran Chinnamalai : அப்போது வரி கொண்டு சென்ற தண்டல்காரரிடம் வரிப்பணத்தை சென்னி மலைக்கும், சிவன் மலைக்கும் இடையில் உள்ள ஒரு சின்ன மலை பறித்தாக சொல் என்று கூறி அனுப்பினார். அப்போது முதல் மக்கள் அவரை அன்போடு சின்னமலை என்று அழைத்தனர்.
தீரன் சின்னமலை, இந்திய சுதந்திர போராட்ட வீரர். தமிழகத்தில் பிரிட்டிஷ்காரரை எதிர்த்து, கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர்.
இவர் இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகே உள்ள செ.மேலப்பாளையம் எனும் ஊரில் 1756ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை ரத்னசாமி கவுண்டர், தாய் பெரியாத்தா ஆவர். தீரன் சின்னமலையின் உண்மையான பெயர் தீர்த்தகிரி கவுண்டர் என்பதாகும்.
இவர் இளம் வயதிலே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர் பயிற்சிகளை பெற்றார். கொங்கு மண்டலம் அப்போது மைசூர் மகாராஜாவின் ஆட்சியில் இருந்தது. கொங்கு நாட்டின் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் சென்ற வரிப்பணத்தை பிடுங்கி, ஏழைகளுக்கு விநியோகித்தார்.
அப்போது வரி கொண்டு சென்ற தண்டல்காரரிடம் வரிப்பணத்தை சென்னி மலைக்கும், சிவன் மலைக்கும் இடையில் உள்ள ஒரு சின்ன மலை பறித்தாக சொல் என்று கூறி அனுப்பினார். அப்போது முதல் மக்கள் அவரை அன்போடு சின்னமலை என்று அழைத்தனர். தீர்த்தகிரி சுருங்கி, சின்னமலையும் சேர்ந்து அவர் தீரன் சின்னமலையானார்.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டிஷார் கொஞ்சம், கொஞ்சமாக நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தியதை சின்னமலை தடுக்க நினைத்தார். இன்றைய கேரளாவிலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் ஒன்று சேர்ந்து பலம் பெறாவண்ணம், இடையில் பெரும் தடையாக சின்னமலை இருந்தார்.
1782ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஹைதர்அலியின் மறைவுக்குப்பின் திப்பு சுல்தான் மைசூருக்கு ஆட்சிக்கு வந்து பிரிட்ஷாரை எதிர்த்து கடும் போர் செய்தார். மாவீரன் தீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களை ஒன்றுதிரட்டி, மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேஸ்வரம், மழவல்லி, சீரங்கப்படணம், போர்களில் திப்புவின் வெற்றிக்கு பேருதவியைச் செய்தது.
40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைக்கு கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டு திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார்.
4ம் மைசூர் போரில் கன்னட போர்வால் திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டு, வீரமரணம் எய்தினார். சின்னமலை கொங்கு நாடு வந்தது. அரச்சலூர் அருகே ஓடாநிலை கோட்டை கட்டி போருக்கு வீரர்களை தயார் செய்தார். ஓடாநிலையில் பிரெஞ்ச்காரர்களின் உதவியோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டது.
பாளையக்காரராக தன்னை அறிவித்துக்கொண்டு, கொங்கு நாட்டின் பாளையக்காரர்களை ஒன்று திரட்ட முற்பட்டார். ஆனால் அவர் திட்டமிட்ட கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
போர்ச்சூழலிலும் கோயில்கள் பல எழுப்பியவர். அவர் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி பெரும் படையாக உருவெடுத்து வந்ததால், பிரிட்டிஷ்காரர்கள் அவரை ஒழித்து கட்ட முடிவு செய்தனர்.
தொடர்ந்து ஆங்கிலேயர்களுடனான போரில் வெற்றி பெற்று வந்த அவரை போரால் வெல்ல முடியாது என்று அறிந்த பிரிட்டிஷ்காரர்கள் சூழ்ச்சி செய்து, சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். போலி விசாரணை நடத்தி, 1805ம் ஆண்டு ஜீலை 31ம் தேதி தூக்கிலிட்டனர்.
டாபிக்ஸ்