சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்வில் உயிரிழப்பு 4ஆக அதிகரிப்பு! தமிழக அரசுக்கு குவியும் கண்டனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்வில் உயிரிழப்பு 4ஆக அதிகரிப்பு! தமிழக அரசுக்கு குவியும் கண்டனம்!

சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்வில் உயிரிழப்பு 4ஆக அதிகரிப்பு! தமிழக அரசுக்கு குவியும் கண்டனம்!

Kathiravan V HT Tamil
Oct 06, 2024 10:54 PM IST

நிகழ்ச்சியின் போது வெயிலின் தாக்கம் காரணமாக 230 பேருக்கு மயக்கமும், 93 பேருக்கு உடல்நலக்கோளாறும் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்வில் உயிரிழப்பு 4ஆக அதிகரிப்பு! தமிழக அரசுக்கு குவியும் கண்டனம்!
சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்வில் உயிரிழப்பு 4ஆக அதிகரிப்பு! தமிழக அரசுக்கு குவியும் கண்டனம்! (Lakshmi)

விமான படை சாகச நிகழ்ச்சி 

92ஆவது விமான படை தின விழாவையொட்டி சென்னை கலங்கரை விளக்கம் மற்றும் சென்னை துறைமுகம் இடையே மெரினா கடற்கரையில் பகுதியில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சென்னை மேயர் ஆர்.பிரியா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அலைமோதிய பெரும் கூட்டம் 

10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்ட இந்த விமான படை சாகச நிகழ்வில் ரஃபேல் உட்பட சுமார் 72 விமானங்கள் சாகசங்களை நிகழ்த்தின. முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் நிகழ்ச்சியின் முடிந்த பின்னர் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்நிலையங்களில் பெரும் கூட்டம் அலைமோதியது. 

 4 பேர் உயிரிழப்பு! பலர் மயக்கம் 

நிகழ்ச்சியின் போது வெயிலின் தாக்கம் காரணமாக 230 பேருக்கு மயக்கமும், 93 பேருக்கு உடல்நல கோளாறும் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விமான சாகச நிகழ்ச்சியை பார்த்து விட்டு பைக்கில் வீடு திரும்பிய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மயங்கி விழுந்து உள்ளார். அவருக்கு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதே போல் ஐ.என்.எஸ் அடையாறு அருகே நின்று விமான சாகசத்தை பார்த்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (34) மயக்கம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜான் (56) என்பவரும் தினேஷ் குமார் (37) என்பவரும் உயிரிழந்து உள்ளனர்.

தமிழக அரசுக்கு அதிமுக கண்டனம் 

இந்த நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யத் தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.  இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன,ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசுக்கு அரசுக்கு என் கடும் கண்டனங்கள்.” என தெரிவித்து உள்ளார். 

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிவிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், ”சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.

குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன!

இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்.” என கூறி உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.