CPM Office Attack: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய போலீஸ் மறுக்கிறது! சிபிஎம் குற்றச்சாட்டு!
CPM Office Attack: சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களில் ஒருவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் எனும்போது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை போட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் வழக்கு பதிவு செய்ய காவல்துறை மறுக்கிறது என சிபிஎம் நிர்வாகி கனகராஜ் குற்றச்சாட்டு
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை மறுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
சாதி மறுப்பு திருமணம் - மார்சிஸ்ட் கம்யூ அலுவலகம் சூறை
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு எழவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகி உள்ளனர். ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்டியின் மாவட்ட அலுவலகத்தில், உள்ள லெனின் சிலை முன்பு 6 ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடிகளுக்கு திண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனை அறிந்த பெண் வீட்டார் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர் சந்திப்பு
இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில் பந்தல் ராஜா மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் முன்பாகவே மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனை தடுக்கச் சென்ற அருள்ராஜ் மற்றும் முருகன் இருவரையும் தாக்கியுள்ளனர். காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கும்பலில் சிலரை பிடித்துள்ளனர்.
பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்காததால், பதிவு திருமணத்திற்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டனர். ரெஜிஸ்டர் ஆபிஸில் திருமணத்தில் பதிவு செய்ய முடியாத நிலையில், காதலர்களை கொலை செய்துவிடுவார்கள் என்ற பயம் இருந்தது.
இது தொடர்பாக காவல் ஆணையரிடம் பேசியபின், பாதுகாப்புக்கு காவலர்களை அனுப்பி உள்ளனர். போலீஸ் வந்த சிறிது நேரத்தில் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், பந்தல் ராஜா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தினர். காதலர்கள் இருக்கிறார்களா என்று தேடி பார்த்து உள்ளனர். இதை தடுக்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கி உள்ளனர்.
இந்த விஷயங்கள் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தொடர் கொலைகள் நடந்து கொண்டே இருக்கிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு தர வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும்.
ஒரு வாரத்திற்கு ஒரு கொலைகளுக்கு மேல் நெல்லை மாவட்டத்தில் நடந்து கொண்டு வருகிறது. காவல்துறையின் செயல்பாடு பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகிறது. விபின் என்ற காவலர், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல் என்னிடம் ஒப்படையுங்கள் என்று கூறி உள்ளார்.
ஒரு கட்சியின் மாவட்ட குழு அலுவலத்தில் இரண்டு பேரை கொலை செய்வதற்காக வந்து உள்ளனர். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களில் ஒருவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் எனும்போது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை போட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் வழக்கு பதிவு செய்ய காவல்துறை மறுக்கிறது.
வீடியோவில் உள்ள பந்தல் ராஜா, பெண்ணின் தாயார், தகப்பனார் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடலை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கூறி உள்ளார்.