Anna and Karunanidhi: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதியின் நினைவிடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

சென்னை மெரினாவில் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது குறித்த வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.26) சென்னை, மெரினா கடற்கரையில், தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் நினைவிடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர், அண்ணா மற்றும் கருணாநிதியின் திருவுருவச் சிலைகளை திறந்து வைத்து, அவர்களது நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
உலகத் தமிழினத்தின் மிக உயர்ந்த தலைவராக திகழ்ந்த அண்ணா 1969–பிப்ரவரி 3-ம் நாள் மறைந்தபின் அவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் மிகச் சிறந்த கட்டடக்கலை வடிவமைப்புடன் மறைந்த முதல்வர் கருணாநிதியால் நினைவிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வராக 19 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்து, தமிழகத்தை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நவீன தமிழகத்தின் சிற்பியாக விளங்கி, உலக வரலாற்றில் உன்னதப் புகழ்ச் சின்னமாகத் திகழும் கருணாநிதி 95-ஆம் வயதில் 2018 ஆகஸ்ட் 7-ம் நாள் மறைந்து, அண்ணாவின் நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதி நினைவிடம் அமைத்திட தமிழக முதல்வரின் அறிவிப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின், 24.8.2021 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பில், எண்பது ஆண்டு பொதுவாழ்க்கை, எழுபது ஆண்டுகள் திரைத்துறை, எழுபது ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திமுக என்ற மாபெரும் பேரியக்கத்தினுடைய தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கருணாநிதி.