Kalaignar 100: ‘ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகை துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும்’ முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kalaignar 100: ‘ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகை துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும்’ முதலமைச்சர் ஸ்டாலின்!

Kalaignar 100: ‘ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகை துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும்’ முதலமைச்சர் ஸ்டாலின்!

Kathiravan V HT Tamil
Sep 20, 2023 07:39 PM IST

”சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலை பத்திரிகைக்கு உள்ள தர்மம்”

நூல் வெளியீட்டு விழாவில் பேசும் முதலமைச்சர் மு.கஸ்டாலின்
நூல் வெளியீட்டு விழாவில் பேசும் முதலமைச்சர் மு.கஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் நூல்கள் வாங்கும் விஷயத்தில் நடந்திருக்க கூடிய பல்வேறு தவறுகளை இங்கே சொல்லக் கூடாது சொல்வதும் முறையல்ல; ஆனால் அவைகள் சரிசெய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

பெரியார் அவர்கள் குடியரசு ஏட்டை நடத்தியபோது அதற்கு அதிகப்படியான விளம்பரங்களை ஆனந்த விகடன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் பெற்றுத் தந்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்முறையாக 1967ஆம் ஆண்டு வெற்றி பெற்று சட்டமன்றம் வரும் நேரத்தில் ‘வருக அண்ணாதுரை’ என்று விகடன் தலையங்கள் தீட்டி உள்ளது. திமுக முதல் மாநில மாநாடு நடைபெற்றபோது 8 பக்க செய்தியை வெளியிட்டது.

2ஆம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது அலங்கார ஊர்திகள் தயாரிக்கும் பொறுப்பை பேரறிஞர் அண்ணா அவர்கள் எஸ்.எஸ்.வாசனிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தார்கள். அண்ணா மறைந்த போது கலைஞர் எழுதிய கலைஞரின் கவிதையை கேட்டு வாசன் அவர்கள் ரொம்ப கலங்கினார். இதை கலைஞர் அவர்கள் பல மேடைகளில் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார்.

இந்த புத்தகம் கலைஞர் குறித்த கருவூலமாக அமைந்துள்ளது. இதை படிக்கும் போது கலைஞர் வாழ்கையோடு நாம் பயணிப்பது போலவே அமைந்துள்ளது. முக்கியமான காலகட்டத்தில் கலைஞர் அவர்கள் அளித்துள்ள பேட்டிகள் எல்லாம் இதில் அமைந்துள்ளது.

1989ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்தபோது ’கலைஞரே வருக கருத்தான ஆட்சி தருக’ என விகடன் தலையங்கம் தீட்டியது. ஒரு ஆட்சி செயல்படுத்தி வரக்கூடிய நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அப்படி எழுதினால்தான் நீங்கள் விமர்சிக்கும்போதும் உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும். எதையுமே ஆதரித்து எழுதமல் விமர்சித்து மட்டும் எழுதினால் அந்த விமர்சனங்களுக்கு மதிப்பே இருக்காது.

சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலை பத்திரிகைக்கு உள்ள தர்மம். அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டுமென்று மிகுந்த பணிவுடன் நான் கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகம், மதசார்பின்மை, சமூகநீதி உள்ளிட்டவைகளெல்லாம் நெருக்கடிகளுக்கு உள்ளாகி உள்ளது. இது அரசியல் ரீதியாக எதிர்கொண்டு தடுப்போம். ஆனால் அதுமட்டும் போதாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள பத்திரிக்கைகள் தங்கள் கடமையை செய்ய வேண்டும்.

1930, 1942ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் ஆனந்த விகடன் நெருக்கடிக்குள்ளானது. இந்தியாவுக்கு சுதந்திரம் தாருங்கள் என்பது ஆட்சேபகரமானது என்றால் விகடனும் குற்றவாளிதான் என்று துணிச்சலாக தலையங்கள் எழுதியது. கடந்த மாதத்தில் விகடனின் வந்த தலையங்கம் மிக மிக முக்கியமானது. ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட பத்திரிகை மற்றும் காலமுறை இதழ்கள் பதிப்பு மசோதாவை கண்டித்து அந்த தலையங்கள் இருந்தது. கொடுமையான விதிகளுடன் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அந்த புதிய மசோதா பத்திரிகை சுதந்திரத்தை மிக மோசமாக நசுக்கும் என்றும் செய்தித்தாள் பதிவாளர் செய்தித்தாள் நிறுவனத்தில் நுழைந்து சோதனை செய்ய முடியும் என்றும் கண்டித்து தலையங்கள் தீட்டப்பட்டுள்ளது. இதைத்தான் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்று சொல்கிறேன்.

ஜனநாயாகத்தை காப்பதன் மூலம் இந்தியாவை காக்க வேண்டிய கடமை நான்காவது தூணான பத்திரிகைகளிடம்தான் உள்ளது. ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகை துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும் என்பதை என் அக்கரை உள்ள வேண்டுகோளாக சுட்டிக்காட்டுகிறேன். அதை இந்த மேடையில் எடுத்து வைப்பது பொருத்தமாக இருக்கும்.

 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.