MK Stalin: ’டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்கிறேன்’ முதல்வர் பரபரப்பு பேட்டி!
”வானிலை ஆய்வு மையம் சொன்னதை விட பல மடங்கு மழை தென் மாவட்டங்களில் பொழிந்துள்ளது”
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் மழை - புயல் - வெள்ளம் ஆகியவை குறித்தும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதுகுறித்து நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை, தேவையுமில்லை. கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி அன்று புயலும், அதன் காரணமாக கடுமையான மழையும் ஒரு நாள் முழுக்கப் பெய்தது. அதற்கு முன்பே தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. மக்கள் பேராபத்தில் இருந்து காக்கப்பட்டார்கள். இதனை ஒன்றிய அரசின் சார்பில், அங்கு வந்த குழுவும் மாநில அரசுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்திருக்கிறது.
மழை நின்றதும் உடனடியாக நிவாரணப் பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். மறுநாளே போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. 95 விழுக்காடு மின் இணைப்பானது மூன்று நாட்களுக்குள் சரிசெய்யப்பட்டது. புறநகரில் ஒரு சில பகுதிகள் நீங்கலாக, நான்கைந்து நாட்களுக்குள் மற்ற அனைத்துப் பகுதிகளும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டன.
தண்ணீரில் மூழ்கியிருந்த பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்தோம். அவர்களையும் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்து அமர்த்தினோம். நானே பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்தேன். 20 அமைச்சர்கள், 50 ஐ.ஏ.எஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் களத்தில் இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், வெளிமாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். புயலுக்கு முன்பும் - புயலின் பிறகும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் பாதிப்பு குறைந்தது.
உடனடியாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்நாத் சிங் அவர்கள் வருகை தந்தார்கள். பல்வேறு இடங்களைப் அவரே பார்வையிட்டார்கள். தலைமைச் செயலகத்தில் ஒன்றிய அமைச்சர் அவர்கள், என்னைச் சந்தித்தார்கள். வெள்ளச் சேதங்களைச் சரி செய்ய முதல் கட்டமாக 5 ஆயிரத்து 50 கோடி ரூபாய் தேவை என்று சொன்னேன். இது தொடர்பாக, இந்தியப் பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் கடிதம் எழுதினேன். எனது கடிதத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் நேரடியாகக் கொண்டு போய் பிரதமர் அவர்களிடம் கொடுத்தார். ஒன்றிய அரசு இந்த ஆண்டு வழக்கமாக வழங்கப்படவேண்டிய 450 கோடியை வழங்கி இருக்கிறது. இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம்.
ஒன்றிய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட குழு தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் தங்கி பல்வேறு இடங்களைப் பார்வையிட்டது. இறுதியாக கோட்டையில் வந்து என்னைச் சந்தித்தார்கள். முழுமையான சேதங்களைக் கணக்கிட்டு தற்காலிக நிவாரணத் தொகையாக 7 ஆயிரத்து 33 கோடியும், நிரந்தர தீர்வுப் பணிகளுக்காக 12 ஆயிரத்து 659 கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.
ஒன்றிய அரசின் நிதி வரட்டும் என்று காத்திருக்காமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை உடனடியாக அரசு அறிவித்தது. 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். கடந்த 17 ஆம் தேதி அன்று சென்னை வேளச்சேரிப் பகுதியில் நானே பங்கேற்று இத்தொகையை வழங்கியிருக்கிறேன். மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் நிதியை முழுமையாகப் பெற்றால் தான் முழுமையாக நிவாரணப் பணிகளைச் செய்ய முடியும். எனவே பிரதமர் அவர்களை நேரடியாகச் சென்று சந்தித்து கோரிக்கை வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. இதன் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கடுமையான மழைப் பொழிவு 17 மற்றும் 18 தேதிகளில் ஏற்படும் என்பதை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் 17 ஆம் தேதி அளித்தது. வானிலை ஆராய்ச்சி மையம் குறிப்பிட்ட மழை அளவுகளுக்கு பல மடங்கு அதிகமாக மழைப் பொழிவு இம்மாவட்டங்களில் வரலாற்றில் இதுவரை பதியப்படாத அளவுக்கு ஏற்பட்டது. எடுத்துக்காட்டாக, காயல்பட்டினத்தில் 94 சென்டி மீட்டர் மழை. அப்பகுதியே வெள்ளக்காடானது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நமக்கு சற்றே தாமதமாக கிடைத்தாலும், அதில் அளித்துள்ள அளவை விட அதிகமாக மழை பொழிவு ஏற்பட்ட சூழ்நிலையிலும், தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மழைப்பொழிவு கடுமையான உடனேயே 8 அமைச்சர்கள், 10 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்ட வாரியாக, இந்திய காவல் பணி அதிகாரிகள் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் நியமிக்கப்பட்டார்கள். அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் வீரர்கள், படகுகள், உபகரணங்கள், 375 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்கள், 275 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் களத்தில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கூடுதலாக, மீட்பு பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 230 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதுமட்டுமின்றி, நமது இராணுவ வீரர்கள் 168 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 12 ஆயிரத்து 653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பெருமழையினையும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் நானும், தலைமைச் செயலாளர் அவர்களும் பலமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் அவ்வப்போது கண்காணித்து வருகிறோம்.
19-ஆம் தேதியான இன்றும் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசைப் பொறுத்தமட்டில், சென்னை - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - திருவள்ளூரில் எந்தவகையில் செயல்பட்டு மக்களைக் காத்தோமோ அதேபோல, நெல்லை - கன்னியாகுமரி - தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களைக் காக்கும் பணியில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.
அரசு இயந்திரம் முழுமையாக அந்த மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது. இந்த பாதிப்புகளுக்கு உள்ளான மாவட்ட மக்களுக்கான நிவாரணத்தையும் தமிழ்நாடு அரசு செய்தாக வேண்டும். ஆகவே, முதலில் சென்னை பெருவெள்ளதிற்காக வைக்கப்பட்ட கோரிக்கையுடன், தென் மாவட்ட வெள்ளச் சேதங்களையும் இணைத்து கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் அவர்களிடம் நேரம் கேட்டிருந்தேன்.
இன்று இரவு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கி உள்ளார்கள். தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முழுமையாக பிரதமர் அவர்களிடம் நேரில் நான் வழங்கப் போகிறேன். இந்த நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களது வாழ்வாதாரங்களை திரும்ப உருவாக்க உடனடி நிவாரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கிட மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களிடம் கோர இருக்கிறேன்.
அதேபோல, தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இம்மாத துவக்கத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட அதிகனமழை வெள்ளப் பெருக்கினால் கடும் பாதிப்புக்களை சந்தித்தோம். இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ள நிலையில், இவற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்குமாறு மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வலியுறுத்த இருக்கிறேன்.
கேள்வி : தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட நேரடியாக செல்வீர்களா?
பதில் : இன்று இரவு பிரதமர் அவர்கள் சந்திக்க நேரம் கொடுத்திருக்கின்ற காரணத்தால், இரவு பிரதமரை
பார்த்துவிட்டு நிலவரத்தையெல்லாம் சொல்லிவிட்டு, Memorandum கொடுத்துவிட்டு, நாளை காலை நேரடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கும் செல்கிறேன்.
கேள்வி: கடந்த காலங்களில் ஒன்றிய அரசிடமிருந்து கோரப்பட்ட நிவாரண நிதி நிலுவையில் உள்ள நிலையில், தற்போது கோரப்பட்ட நிவாரண நிதி உடனடியாக கிடைக்குமா?
பதில் : கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறோம். ஏற்கனவே, ஒன்றிய அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் அவர்களிடம் சொல்லியிருக்கிறோம். பிரதமருக்கு கடிதம் கொடுத்திருக்கிறோம். இன்றைக்கும் பிரதமரிடத்தில் இதை வலியுறுத்துகிறோம்.
கேள்வி: மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதில்: அதற்கு ஏற்கனவே பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். சென்னையில் இதுவரை 47 வருடங்களாக வராத மழை, தென்பகுதியில் 60 ஆண்டு காலமாக சந்திக்காத மழை பெய்திருக்கிறது. அதனால் இது எதிர்பாராதது. இருந்தாலும் இதற்காக முன்கூட்டியே என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் நிச்சயம் அரசு செய்யும்.
கேள்வி : நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரச்சனை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து....
பதில்: அது உங்களுக்கு புரிந்தால் சரி. உங்களுக்கு புரிந்தால் அதை சொல்லுங்கள்.
கேள்வி : கவர்னர் தமிழ்நாட்டில் பல அலுவலர்களை வைத்து கூட்டங்களை நடத்தி வருவது குறித்தும், இதற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருவது பற்றி....
பதில் : கொரோனா போன்ற பேரிடர் ஏற்பட்டபோது, மாண்புமிகு பிரதமர் அவர்கள்தான் ஆலோசனை கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளை வழங்கி கொண்டிருந்தார்கள். அப்போது குடியரசுத் தலைவர் ஏதாவது செய்திருந்தால், என்ன reaction, அதே reaction-தான் இப்போது.