’மென்பொருள் துறையில் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்’ Umagineமாநாட்டில் முதல்வர் பேச்சு
”எல்லாத் துறையும் வளர்ந்தால் தான் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் என்பது அதன் உச்சிக் கோபுரம். இதுதான் திராவிட மாடல் கொள்கை ஆகும்”

சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்மய சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டினை (Umagine) காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், யுமாஜின் 2023 மாநாட்டில் பங்கெடுத்து சிறப்பிக்க வந்துள்ள தகவல் தொழில் நுட்பத் துறை வல்லுநர்கள் அனைவர்க்கும் எனது வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருவதால் நேரில் இந்த மாநாட்டுக்கு வருகை தந்து உங்களைச் சந்திப்பதற்கும் - உரையாற்றுவதற்கும் வாய்ப்பு இல்லாமல் போன சூழலை நினைத்து வருந்துகிறேன்.
உங்களில் சிலரை நான் ஏற்கனவே சந்தித்துள்ளேன். சிலர் ஏற்கனவே தமிழ்நாட்டுடன் வர்த்தக உறவை மேற்கொண்டு வருபவர்களாக இருக்கிறீர்கள். எனவே தமிழ்நாடு உங்களுக்கு புதிதல்ல. உங்களது கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும் களமாக தமிழ்நாட்டை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.