Sir Raja Annamalai Chettiar: ’செல்வந்தர் To கல்வியாளர்’ செட்டிநாட்டு ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவுதினம் இன்று…!
”1911 மற்றும் 1935ஆம் ஆண்டுகளில் லண்டனுக்கு வணிகப்பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை போன்றதொரு பிரம்மாண்ட பல்கலைக்கழகத்தை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது”
அண்ணாமலை பல்கலைக்கழகம், சர் ராஜா அண்ணாமலைபுரம், சர் ராஜா அண்ணாமலை மன்றம் இந்த பெயர்களை அவ்வுளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்த பெயரை தாங்கிய நபரின் முன்னெடுப்புகள்தான் தமிழ்நாடு இன்று அடைந்துள்ள உயர்கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் என்றால் அது மிகையல்ல.
செல்வந்தர் குடும்பத்தில் பிறப்பு
தொழிலதிபர், வங்கியாளர், கல்வியாளர், தனவந்தர் என பன்முகத் தம்மை கொண்ட அண்ணாமலை செட்டியார் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் 1881ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பிறந்தார்.
வங்கி உள்ளிட்ட நிதிசேவைகள் சார்ந்த துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவரின் குடும்பத்தினர் இந்தியா, இலங்கை, பர்மா (மியான்மர்), மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகம் செய்து வந்தனர்.
கல்வியும் வணிகமும்
தொடக்கத்தில் கானாடுகாத்தானிலும் கரூரிலும் கல்வி பயின்ற அவர் ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து 7ஆம் வயதில் இருந்து வீட்டில் உள்ளூர் தபால்காரர் மூலம் ஆங்கில கல்வியும் பயின்றார். பின்னர் குடும்ப வணிகத்தையும் அண்ணாமலை செட்டியார் பழக தொடங்கினார். 1895ஆம் ஆண்டில் அண்ணாமலை செட்டியாருக்கும் சீதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
கேம்பிரிட்ஜ் கனவு
1911 மற்றும் 1935ஆம் ஆண்டுகளில் லண்டனுக்கு வணிகப்பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார்.
இதுபோன்றதொரு பிரம்மாண்ட பல்கலைக்கழகத்தை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.
1921ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.
அண்ணாமலை பல்கலைக்கழகம்
1928ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனிச்சட்டம் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக காரணமாக அமைந்தது.
சிதம்பரம் ரயில்நிலையம் அருகே உள்ள ’திருவேட்களம்’ என்ற இடத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. 20 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட அப்பல்கலைக்கழகம் 1929ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது.
பல்கலைக்கழக நிறுவனராக இருந்த அண்ணாமலை செட்டியார் மற்றும் அவரது வாரிசுகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருந்தன.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள்
முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜூ, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் தந்த வள்ளல் ஜம்புலிங்க முதலியார், மறைந்த திமுக பொதுச்செயலாளரான பேராசியர் க.அன்பழகன், முன்னாள் அமைச்சர்கள் நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம், பண்ரூட்டி ராமச்சந்திரன், பொன்முடி, மற்றும் இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகர் டி.ராஜேந்தர், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர்.
தமிழிசையில் தனி கவனம்
தமிழிசையின் மீது தனியார்வம் கொண்ட அண்ணாமலி செட்டியார், தமிழிசை மறுமலர்ச்சிக்காகவே தனி மாநாடு ஒன்றை நடத்தினார். புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி தமிழிசையில் மறைந்து போன அறிய செல்வங்களை வெளிக்கொணரவும்; தமிழ் சிசை ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும்; தமிழ் இசைக்கீர்த்தனைகள் அடங்கிய நூல்களை வெளியிட்டவும் பல்வேறு முயற்சிகளை அண்ணாமலை செட்டியார் முன்னெடுத்தார்.
ராஜா பட்டம்
’நாடேங்கும் தமிழிசை முழங்க வேண்டும் என்பதே எனது ஆவல் என்றும் ஈட்டலும், காத்தலும் வகுத்தலும் என் வாழ்கை கொள்கை’ என்று தனது அனைவருக்கான பொதுக்குறிப்பில் அண்ணாமலை செட்டியார் கூறினர்.
3.3.1929ஆம் ஆண்டு ‘ராஜா’ எனும் பட்டம் அண்ணாமலை செட்டியாருக்கு வழங்கப்பட்டது.
1948ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தனது மூச்சை நிறுத்திக்கொண்ட அண்ணாமலை செட்டியார் தனது கல்விப்பணிகளால் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார்.
டாபிக்ஸ்