Annamalai: பிரதமரின் சென்னை வருகையை புறக்கணித்தாரா அண்ணாமலை - காரணம் என்ன?
சென்னையில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ள நிகழ்வுகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று பிற்பகலில் சென்னை வந்தார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிங், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர். அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர்.
பின்னர், சென்னை புதிய விமான நிலையத்துக்கு வந்த பிரதமர், ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்த பிரதமர், அங்கிருந்து கார் மூலம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் ரயில் நிலையம் சென்றார். அங்கு சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை பச்சை கொடி காட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழக பாஜக மாநில தலைவர் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பாஜக சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரதமர் பங்கேற்ற அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார். ஆனால், பிரதமரின் சென்னை நிகழ்வுகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
முன்னதாக, பிரதமர் மோடியின் இந்த சென்னை வருகையின் போது, விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மோடியை வரவேற்கிறார் என்றும், சென்னையிலிருந்து மோடியை வழியனுப்பி வைக்கும் போது பிரதமரிடம் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டது என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டாபிக்ஸ்