Annamalai : நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முதல்வர்.. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சரே - அண்ணாமலை கேள்வி!
Annamalai : நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.
Annamalai : மத்திய பட்ஜெட் 2024 ஐ காலை 11 மணியளவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது நிதிநிலை அறிக்கையில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கும் வகையில் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன். அதை புறக்கணிக்க போகிறேன். நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டின் தேவைகளை உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்று தெரிவித்தார். இந்நிலையில் முதல்வரின் நிதி ஆயோக் கூட்ட புறக்கணிப்பு என்பது நாடகம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.
"நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.
நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?
ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?
மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சர்?
பேசவே இல்லை என்பதுதான் உண்மை.
தொகுதியின் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது முதலமைச்சர்கள் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9