Anbumani: பாமக தேர்தல் அறிக்கை: 'காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் ஏன் தேவை?' - அன்புமணி ராமதாஸ் விளக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anbumani: பாமக தேர்தல் அறிக்கை: 'காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் ஏன் தேவை?' - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

Anbumani: பாமக தேர்தல் அறிக்கை: 'காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் ஏன் தேவை?' - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

Karthikeyan S HT Tamil
Mar 27, 2024 04:21 PM IST

PMK Manifesto: குடும்ப அமைப்பைக் காக்கவும் வளிரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்துக்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம் என்கிற வாக்குறுதியையும் பாமக தமது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக கட்சியின் தேர்தல் அறிக்கையில், இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம் என்கிற வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்துக்குப் பெற்றோர் ஒப்புதல் அவசியம். இந்தியாவில் கர்நாடகா உயர் நீதிமன்றமும் இதனை வலியுறுத்தி உள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும் குடும்ப அமைப்பைக் காக்கவும் வளிரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்துக்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம் என்கிற வாக்குறுதியையும் பாமக தமது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

இளம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் அதிகரித்து வருகிறது. குடும்ப முன்னேற்றம் மற்றும் வாழ்வாரத்தைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் செல்லும் பெண்கள் ஆபாச அர்ச்சைகளாலும், பாலியல் அத்துமீறல்களாலும் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாலியல் சீண்டல்களையும் ஒழிக்கவும், பெண்கள் முழுமையான பாதுகாப்புடன் வாழும் சூழலை உருவாக்கவும் பாடுபடுவோம் என்கிற வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, "இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. சிங்கப்பூர், பிரேசில் போன்ற நாடுகளில் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்துக்கு பெற்றோரின் ஒப்புதல் தேவை என்கிற நிலைப்பாடு இருக்கிறது. இதை பாமக மட்டும் சொல்லவில்லை. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சட்டமாக்க வேண்டும் என்கிற அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் அறிக்கையில் இதை இடம்பெறச்செய்துள்ளோம்." என்றார்.

பாமக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக ரூ.10 இலட்சம் வைப்பீடு.

18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகள் என்று அறிவிக்கப்படுவார்கள்.

பெண் குழந்தைகளுக்காக தனி விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.

குழந்தைகளுக்கு ஆளுமைக் கல்வி, இணையப் பாதுகாப்புக் கல்வி வழங்கப்படும்.

ஆதரவற்ற கைம்பெண்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர நடவடிக்கை.

கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில், கல்வித் துறையில் புரவலர் என்ற வகையில் மட்டும் மத்திய அரசின் பங்களிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படுவது போன்று உலகத்தரம் வாய்ந்த கல்வியை, முழுக்க முழுக்க அரசின் செலவில் இலவசமாக வழங்க பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளை அமைக்கவும், பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடங்களை நடத்துவதற்கும் தேவையான நிதியில் 50 விழுக்காட்டை மானியமாக வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.

அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யும்படி, மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும் என்பன போன்ற பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.