Aavin: குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆவின் அத்துமீறல்களே சான்று!-அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadas: அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆவின் அத்துமீறல்களே சான்று என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
சென்னையை அடுத்த அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆவின் பால்பண்ணையில் பல மாதங்களாக வேலைவாங்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களே தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆவின் பால்பண்ணை முன் நேற்று போராட்டம் நடத்தியதன் மூலம் இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்று உறுதியாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஆவின் நிறுவனமும் மறுக்கவில்லை.
ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட குத்தகைத் தொழிலாளர் முறை தான். ஒரு நிறுவனத்திற்கோ, ஓர் அலுவலகத்திற்கோ குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியாளர்கள் தேவைப்பட்டால், அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் நேரடியாக நியமிக்காமல், மனிதவள நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, அவர்களுக்கான ஊதியத்தை சம்பந்தப்பட்ட மனிதவள நிறுவனத்திற்கு வழங்குவது தான் குத்தகைத் தொழிலாளர் முறை. ஆவின் நிறுவனத்திலும் அப்படித்தான் பால்பொருட்கள் தயாரிப்புக்குத் தேவையான தொழிலாளர்களை ஹரிஓம் என்ற மனிதவள நிறுவனத்திடமிருந்து ஆவின் அம்பத்தூர் பால்பண்ணை பெற்றுள்ளது.
ஹரி ஓம் மனிதவள நிறுவனம் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அனுப்பிய போதும், அதைக் கூட கண்டுகொள்ளாமல் அவர்களிடமிருந்து ஆவின் நிறுவனம் வேலைவாங்கியுள்ளது. குழந்தை தொழிலாளர்களுக்கான ஊதியத்தை ஆவின் நிறுவனத்திடமிருந்து வாங்கிய மனிதவள நிறுவனம், அதை உழைத்த குழந்தைகளுக்கு வழங்கவும் இல்லை; அதையும் ஆவின் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. குழந்தைத் தொழிலாளர் முறை, மனித உரிமை மீறல், உழைப்புச் சுரண்டல், ஊதியம் மறுப்பு என அடுக்கடுக்காக குற்றங்கள் நடந்திருந்தும் கூட அவற்றை ஆவின் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. குத்தகைத் தொழிலாளர் முறையின் மிகப்பெரியக் கேடு இது தான். இது போராடிப் பெற்ற உரிமைகளை காவு கொடுக்கும் முறை ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த முறை தான் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது டி பிரிவு பணியாளர்களை மட்டும் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிக்கும் அரசு, அடுத்தக்கட்டமாக சி பிரிவுக்கும் இதே முறையை நீட்டிக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த முறையில் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுகிறதா? அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், மன நலத்துடனும் உள்ளார்களா? என்பன உள்ளிட்ட எதையும் அரசு கண்டுகொள்ளாது. இவை தொழிலாளர் நலன் சார்ந்த அம்சங்கள் என்றால், பொதுநலன் சார்ந்த சிக்கல்களும் உள்ளன. மனிதவள நிறுவனத்தால் பணிக்கு அனுப்பப்படுபவர்களின் பின்னணி குறித்தும் அரசுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் பொதுநலனுக்கு எதிரான செயல்களை செய்ய அரசு அலுவலகங்களை பயன்படுத்திக் கொண்டால் அதையும் அரசு நிறுவனங்களால் கண்டுபிடிக்க முடியாது.
எந்த பொறுப்புடைமையும் (Accountability) இல்லாத குத்தகைத் தொழிலாளர் முறை தேவையா? என்பது தான் கடந்த மூன்று ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பி வரும் வினா ஆகும். இந்த முறையில் உள்ள குறைகளை ஆவின் நிறுவனத்தில் நடந்த சுரண்டல் அம்பலப்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக ஊதிய நிலுவை வழங்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்யில் கூறப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்