Amar Prasad Reddy Vs Maridhas: பாய்ந்த ரெட்டி! பதுங்கிய மாரிதாஸ்? சமாதான ட்வீட்!
”நான் ப்ளே செய்தால் அடுத்து என்ன ஆகும் வரை நான் அடிப்பேன். என் அம்மா இமேஜ்ஜை அவர் போட்டு இருக்கிறார். நான் இதனை சகித்துக் கொள்ளமாட்டேன்”
பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை தனது வீடியோவாக பேசி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருபவர் யூடியூபர் மாரிதாஸ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோ ஒன்று வைரல் ஆனது. இது குறித்து ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்த மாரிதாஸ்,
ஏற்புடையதல்ல
“உரிய நபரைப் பதவி நீக்கம் செய்துள்ளதை வரவேற்கிறேன். எதிர் கருத்து பதிவு செய்வது தவறில்லை அதில் பெண்ணுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து அருவருப்பாகப் பரப்புவது ஏற்புடையதல்ல என்பதே என் கருத்து. இருபக்கமும் கூடுதல் பொறுப்பு தேவை! கடந்து செல்லுங்கள்பொது எதிரி மீது கவனம் செலுத்துங்கள்” என தெரிவித்திருந்தார்.
”மாரிதாஸ் கட்சியில் சேர்ந்து கருத்து சொல்லட்டும்”
மாரிதாஸின் இந்த கருத்துக்கு தனியார் ஊடகம் ஒன்றில் பதிலளித்து பேசிய பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, ”மாரிதாஸ் கட்சியில் சேர்ந்த பிறகு எந்த கருத்தை வேண்டுமானாலும் பேசட்டும் அதற்கு பதிலளிக்கிறேன். பாஜகவுக்கு எல்லோரும் அறிவுரை சொல்ல முடியாது, கட்சியில் சேர்ந்து பதவியை பெற்றுக்கொண்டு கருத்து தெரிவிக்கட்டும்” என கூறி இருந்தார்.
”சுயமரியாதை முக்கியம்”
அமர்பிரசாத் ரெட்டியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த மாரிதாஸ், இந்த சண்டியர் தனமான பேச்சுக்கு ரெட்டி அவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லை இன்று வார் ரூம் 2.0 என்ற வீடியோ வெளியிடப்படும். அடுத்த 20 ஆண்டுகள் பாஜக மோடி அவர்கள் ஆட்சி நடப்பது தான் தேசத்திற்கு நல்லது எனத் தீவிரமாக நம்புபவன் நான். அதே நேரம் சுயமரியாதை எதை விடவும் முக்கியமானது எனக்கூறி அமர்பிரசாத் ரெட்டியை கண்டித்து இரண்டு வீடியோக்களை வெளியிட்டார்.
அமர்பிரசாத் ரெட்டியில் அரசியல் பயணத்தை அக்கு அக்காக பிரித்து மேயும் மாரிதாஸின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதுடன், பொதுவெளியில் பெரும் விவாதமாக மாறியது.
”தக்க பதிலடி கொடுப்பேன்”
இது தொடர்பாக “உண்மை என்ன?” என்ற பெயரில் பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டர் ஸ்பேசஸில் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினர். இதில் பேசிய பாஜக விளையாட்டு மேம்பாட்டு அணியின் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி,
”என் இனிய நண்பர்களே! சித்தி சீரியல் போல எபிசோட் எபிசோட்களாக அவர் வீடியோவை வெளியிடட்டும், மொத்தட்திற்கும் சேர்த்து பாயிண்டு டூ பாயிண்ட் ரிபேட்டல் நான் தருவேன். நான் ஒரு அரசியல்வாதி,
நான் ப்ளே செய்தால் அடுத்து என்ன ஆகும் வரை நான் அடிப்பேன். என் அம்மா இமேஜ்ஜை அவர் போட்டு இருக்கிறார். நான் இதனை சகித்துக் கொள்ளமாட்டேன்; அவரை மன்னிக்கமாட்டேன். அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் என்ன பேசினார், தலைவர் அண்ணாமலையை அவர் ஏன் எதிரியாக பார்க்கிறார் என்பது உட்பட எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன்.
அதை அவர் எதிர்கொள்ளட்டும். நான் பேசக்கூடாது கடந்து செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் என் தாயின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். எந்த தனி மனிதர்களையும் விட கட்சி பெரியது என்று நான் அவருக்கு காட்டுவேன்” என தெரிவித்தார். அவரின் இந்த ஆடியோவை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
”விரோதம் விட்டு விலகுவோம்”
இந்த நிலையில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ள மாரிதாஸ், ”நல்ல மனிதர்கள், பெரியவர்கள் பலர் கேட்டுக் கொண்டதால் விரோதம் விட்டு விலகி ஆளும் திமுக அரசுக்கு எதிரான என் பணியைத் தொடர விரும்புகிறேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி... ஈரோடு இடைத்தேர்தலில் கவனம் செலுத்துவோம். திமுக கூட்டணி தோல்வியைத் தழுவ வேண்டியது அவசியம்” என பதிவிட்டுள்ளார்.
எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டு பாஜகவின் வண்டவாளங்களை மாரிதாஸ் தண்டவாளத்தில் ஏற்றிவிட்டதாக நெட்டிசன்களை கிண்டல் செய்து வந்த நிலையில் பாஜகவின் முக்கிய தலைகளின் தலையீட்டால் தற்காலிகமாக இந்த பிரச்னைக்கு முடிவுகட்டி உள்ளதாக கூறுகிறார்கள் கமலாலய ஆதரவாளர்கள்
டாபிக்ஸ்