Tirupati : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்.. பகல் 11 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tirupati : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்.. பகல் 11 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!

Tirupati : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்.. பகல் 11 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!

Divya Sekar HT Tamil
Oct 01, 2024 09:50 AM IST

Tirupati Temple : இம்மாதம் 4ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் துவங்கி நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருப்பதி
திருப்பதி

வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை திருமஞ்சனம் என்று கூறுவது வழக்கம். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம் (கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி) நடத்தப்படுகிறது.

யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திருமஞ்சனம் நடத்துவார்கள்.

கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்

இந்த நிகழ்ச்சியின் போது ஏழுமலையான் கோவிலை ஒரு ஆழ்வாராக கருதி அதனை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இம்மாதம் 4ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் துவங்கி நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து பல்வேறு வகையான சுகந்த திரவியங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமண கலவையை கோயில் சுவர்களுக்கு தெளித்தனர். தொடர்ந்து பகல் 11 மணி முதல் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட உள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை

முன்னதாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம சாஸ்திரத்தின்படி ஆண்டுக்கு நான்கு முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடப்பது வழக்கம். அதாவது யுகாதி (தெலுங்கு வருட பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி மற்றும் வருடாந்திர பிரம்மோற்சவம் விழாக்கள் நடைபெறுவதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவம் இந்தாண்டு வரும் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் காலை, மாலை என இருவேளைகளிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும். 

4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைப்பு

பிரம்மோற்சவத்தையொட்டி வரும் 1ஆம் தேதி (செவ்வாய்) கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். எனவே அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அப்போது கோயில் முழுவதும் தூய்மை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனால் அன்று 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும். அதன்பிறகு பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்று விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.