Khushboo: சேரி என்ற சொல்லை திரும்பப்பெறப்போவதில்லை - நடிகை குஷ்பூ திட்டவட்டம்
சேரி என்ற சொல்லை திரும்பப்பெறப்போவதில்லை என பாஜகவைச் சார்ந்த நடிகை குஷ்பூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தி குஷ்பூ செய்த டிவீட் சர்ச்சையான நிலையில், தான் அக்கருத்து குறித்து பின்வாங்கப்போவதில்லை என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையானது. அப்போது மன்சூர் அலிகானுக்கு தனது டிவீட் மூலம் கண்டனம் தெரிவித்தார் குஷ்பூ. அப்போது, எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு எதிர்வினையாற்ற முயன்றார், குஷ்பூ. அப்போது ’’திமுக குண்டர்கள் இத்தகைய மோசமான பாஷையைத் தான் பயன்படுத்துவார்கள். அதுதான் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. மன்னிக்கவும். என்னால் உங்களைப் போல, சேரி மொழியில் பதிலளிக்க முடியாது’’ எனப்பதிவிட்டிருந்தார். சேரி எனப்பேசியதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நீலம் பண்பாட்டு மையம் தனது கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் நடிகையும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அழகு எனப்பொருள். நான் அதை கிண்டலாக தான் குறிப்பிட்டேன். பொதுவாக எனது பதிவுகளில் கிண்டல் இருக்கும். தான் யாரையும் தரம் தாழ்ந்து பேசவில்லை. எனது கருத்தில் ஒருபோதும் பயந்து பின்வாங்கியதில்லை. அரசுப்பதிவுகளிலேயே சேரி உள்ளது. செம்மஞ்சேரி, வேளச்சேரி ஆகிய ஊர் பெயர்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள். ஒரு பெண்ணை அவதூறாகப் பேசியதைக் கேட்காமல் எனது வார்த்தையைப் பேசியதற்காக விமர்சிக்கின்றனர். நான் அறிந்த மொழியில் பேசியுள்ளேன்’ என விளக்கம் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.