சொத்துக்குவிப்பு வழக்கு: 810 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்.. சிக்கலில் முன்னாள் அமைச்சர் காமராஜ்!
Former AIADMK Minister Kamaraj: அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை திருவாரூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஆர்.காமராஜ், வருமானத்துக்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என மொத்தம் 51 இடங்களில் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2022 ஆம் ஆண்டு சோதனை மேற்கொண்டது. சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி ஆகிய இடங்களில் காமராஜ் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.41 லட்சத்து 6 ஆயிரம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, ஐபோன், கணினி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், காமராஜ் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பெயரிலும், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து மொத்தம் 58 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு, திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காமராஜ், அவரது மகன் இனியன், இன்பன் மற்றும் நண்பர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 810 பக்க குற்றப்பத்திரிகையை திருவாரூர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையுடன், 18000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக முறைகேடு செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த காமராஜ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்