பார்டர் புரோட்டா கடையில் 200 கிலோ கெட்ட இறைச்சி - அசைவ பிரியர்கள் ஷாக்!
Courtallam Border Parotta shop: குற்றாலம் அருகே இயங்கி வரும் பிரபல பார்டர் புரோட்டா கடையில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே பிரானூரில் இயங்கி வரும் பிரபல பார்டர் புரோட்டா கடையில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவிகளில் குளித்து மகிழ்வது ஒரு சுகமான அனுபவம் என்றால் குளித்து முடித்தவுடன் அசைவ உணவு பிரியர்களின் முதல் தேடல் பிரானூரில் உள்ள பிரபல பார்டர் புரோட்டா கடை தான்.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளும், மக்களும் இங்கு புரோட்டாவை ரசித்து ருசிப்பது வழக்கம். குற்றால சீசன் சமயங்களில் எந்நேரமும் இந்த கடையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், பார்டர் புரோட்டா கடையில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பார்டர் புரோட்டா கடைக்கு நேரில் சென்று நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது கடை பூட்டப்பட்டிருந்ததால், அந்த கடைக்கு சொந்தமான சால்னா தயாரிக்கும் குடோனுக்கு அதிகாரிகள் நேரில் சென்றனர். ஆனால், ஒரு குடோனுக்கு சாவி இல்லை என கூறப்பட்டதால் அதற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் சாவி எடுத்து வரப்பட்டதை தொடர்ந்து சீல் அகற்றப்பட்டு, குடோனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு சமைக்கப்படும் உணவு தரத்தை ருசித்து பார்த்த அதிகாரிகள்,அப்போது அங்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த 4 மூட்டை மிளகாய் வத்தலை பறிமுதல் செய்தனர்.
மேலும், குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். தென்காசியில் பிரபல பார்டர் புரோட்டா கடையில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அந்த பகுதி வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி குற்றாலம் செல்லும் அசைவ பிரியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டாபிக்ஸ்