’அரசுப்பள்ளியை தேடி வந்த 11 லட்சம் மாணவர்கள்’ அன்பில் மகேஷ் பேட்டி
எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு வழங்க வேண்டிய வீடுகளை வழங்காமல் கடந்த அதிமுக அரசு வஞ்சித்துள்ளது- அன்பில் மகேஸ் பொய்யாமொழி
சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 5ஆம் தேதி வெளியாவதாக இருந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் போட்டி தேர்வுகள் காரணமாக வரும் மே 8ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளோம்.
2016-2021ஆம் ஆண்டில் உயர்நிலை பள்ளிகளில் 11 சதவீதமும் மேல்நிலை பள்ளிகளில் 14 சதவீதம் பேரும் தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளதாக சிஏஜி அறிக்கையில் சொல்லி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளியை தேடி வந்துள்ளனர்.
ஊரக வளர்ச்சி துறையில் 2016 முதல் 2021 வரை 2.5 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டி உள்ளனர். வீடுகட்டும் திட்டத்தில் முறையான தகவல்களை ஒன்றிய அரசிடம் தெரிவிக்காததால் ஒன்றிய அரசு தர வேண்டிய ஆயிரத்து 115 கோடி ரூபாயை நிறுத்தி வைத்துவிட்டார்கள்.
எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு வழங்க வேண்டிய வீடுகளை வழங்காமல் கடந்த அதிமுக அரசு வஞ்சித்துள்ளது. எஸ்.சி.பிரிவை சேந்தவருக்கு வழங்கப்பட வேண்டிய வீட்டை பி.சி.பிரிவை சேர்ந்த செந்தில் குமார் என்பவருக்கு வழங்கி உள்ளனர்.
3354 வீடுகள் இது போன்று முறைகேடாக கட்டப்பட்டு இதற்காக 50 கோடிக்கும் மேற்பட்ட தொகை முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது. 2021 நவம்பர் முதல் இந்தாண்டு மார்ச் வரை திமுக வந்த பிறகு வரலாற்றில் முதல் முறையாக 2432 கோடி ரூபாயை பெற்றுள்ளோம். வீடுகட்டுவதில் முறைக்கேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் 6 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.