10th Result: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% சதவீதம் தேர்ச்சி..மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  10th Result: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% சதவீதம் தேர்ச்சி..மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!

10th Result: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% சதவீதம் தேர்ச்சி..மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!

Divya Sekar HT Tamil
May 10, 2024 10:05 AM IST

TN 10th Result 2024 : 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% சதவீதம் ஆகும்.வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% சதவீதம் தேர்ச்சி
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% சதவீதம் தேர்ச்சி

 தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்டம் மின் சாதனங்கள் அறைக்கு கொண்டுவர தடை விதிக்கப்பட்டது. தேர்வு முறைகேடுகளை தவிர்க்க மாநிலம் முழுவதும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வு பணியில் ஈடுபட்டன. 4,107 மையங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தநிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியானது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இணையதளங்களில் மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு உள்நுழைய வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% சதவீதம் ஆகும்.வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகம தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.53%

மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 88.58%

மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களின் விவரம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,94,264.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை 4,47,0 61.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 4,47,203.

தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8,18,743.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி.

தேர்ச்சி பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை 4,22,591.

மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,96,152.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.58 சதவீதம்.

மாணவர்களை விட 5.95 சதவீதம் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல் இடத்தில் அரியலூர்

தேர்ச்சி சதவீதத்தில் தமிழகத்தில், அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. மொத்தம் 97.31 சதவீதம் பேர் அரியலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற நிலையில், அங்கு மாணவர்கள் 4726 பேரும், மாணவிகள் 4582 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாவதாக, சிவகங்கை மாவட்டம் மாநிலத்தில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது. 97.02 சதவீதம் தேர்ச்சியை பெற்ற சிவகங்கை மாவட்டத்தில், 8271 மாணவர்களும், 8908 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநிலத்தில் மூன்றாவதாக, ராமநாதபுரம் மாவட்டம் 96.36 சதவீதம் பெற்றுள்ளது. அங்கு தேர்வு எழுதியதில், 7372 மாணவர்களும், 7749 மாணவிகளும் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே போல கன்னியாகுமரி, திருச்சி மாவட்டம் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பெற்றுள்ளன. விருதுநகர் 6வது இடத்தில் உள்ளது.

இந்த முறை டாப் 5 இடங்களை தென் மாவட்டங்களே தங்கள் வசமாக்கியிருக்கின்றன. இந்த முறை குறைந்தபட்ச தேர்ச்சி விகிதம் என்று பார்க்கும் போது அதில், 82.07 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்று, வேலூர் மாவட்டம் கடைசி இடமான 38 வது இடத்தில் உள்ளது. அதே போல ராணிப்பேட்டை 37 வது இடத்திலும், திருவண்ணாமலை 36 வது இடத்திலும், திருவள்ளூர் 35வது இடத்திலும் கள்ளக்குறிச்சி 34வது இடத்திலும் உள்ளன.

புதுச்சேரியை பொருத்தவரை, காரைக்கால் 78.20 சதவீதம் தேர்ச்சியையும், புதுச்சேரி 91.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்

முன்னதாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார். அதன்படி, மொத்தம் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சிறிது அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44 சதவீதமும் மாணவர்கள் 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் 1-ல் தொடங்கி 13 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6 காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.