இஸ்ரோவுக்கு செல்லும் 100 அதிர்ஷ்டக்கார மதுரை அரசுப்பள்ளி மாணவர்கள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இஸ்ரோவுக்கு செல்லும் 100 அதிர்ஷ்டக்கார மதுரை அரசுப்பள்ளி மாணவர்கள்

இஸ்ரோவுக்கு செல்லும் 100 அதிர்ஷ்டக்கார மதுரை அரசுப்பள்ளி மாணவர்கள்

I Jayachandran HT Tamil
Dec 02, 2022 08:10 PM IST

மதுரை அரசுப்பள்ளி, மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களை இஸ்ரோ தலைமையிடத்துக்கு அழைத்துச் செல்ல தனியார் பள்ளி ஏற்பாடு செய்துள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

மதுரை கோச்சடை தனியார் பள்ளியில் அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளிகளில் படிப்பவர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான கலை மேம்பாட்டு திறன் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற 100 பேரை இஸ்ரோவுக்கு குயின் மீரா பள்ளி நிர்வாகத்தினர் இலவசமாக அழைத்து செல்கிறார்கள்.

மதுரை தனியார் பள்ளி சார்பில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த 2 தினங்கள் பள்ளி வளாகத்தில் நடந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. என மொத்தம் 200 பள்ளிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், சிலம்பம், நடனம், பாட்டு, ஓவியப்போட்டி, மாறுவேடபோட்டி உள்ளிட்ட 25 தலைப்புகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைவர் டாக்டர் சந்திரன் தலைமை தாங்கினார். வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன், டாக்டர் அப்துல்கலாம் விஷன் 2020 அமைப்பின் தலைவர் திருச்செந்தூரான், செல்லமுத்து அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இந்த போட்டிகள் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், வருடம் தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களை ஒப்பிடும்போது இந்த வருடம் அதிகளவிலான பள்ளிகளில் இருந்து சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக போட்டியில் வெற்றி பெற்றவர்களில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இதுபோல் அடுத்த வருடத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் 500 மாணவ, மாணவிகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர் என்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.