Afg vs Pak fans clash: தோல்வியை தாங்க முடியாமல் பாக். ரசிகர்கள் மீது தாக்குதல்
கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில் தோல்வி அதிர்ச்சி ஒரு புறம் என்றால், அவுட்டானி பின் பேட்டை காட்டி மிரட்டிய ஆசிப் அலியின் நடத்தை மற்றொரு புறம் பொறுமையை இழக்க செய்ய, மொத்த கோபத்தையும் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் மைதானத்தின் இருக்கைகள் மீது வெளிப்படுத்தியுள்ளனர் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள்.
ஆசிய கோப்பை 2022 தொடரின் சூப்பர் 4 போட்டிகளில் இதுவரை நடைபெற்ற அனைத்து ஆட்டங்களுமே பரபரப்பாகவே நடைபெற்றுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (செப்டம்பர் 8) நடைபெற்ற போட்டியில் மிக குறைவான இலக்கை சிறப்பான பெளலிங்கால் ஆப்கானிஸ்தான் அணி கட்டுப்படுத்திய போதிலும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு இருக்கும் அதே பரபரப்பு, எதிர்பார்ப்பு ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதும் இந்தப் போட்டியிலும், அதை காண வந்த ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடரில் நிலைத்திருக்க வாழ்வா சாவா ஆட்டமாக இந்த போட்டி அமைந்திருந்த நிலையில் முதலில் பேட் செய்து 29 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது பேட் செய்த பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை அற்புதமான பெளலிங்கால் சிறப்பாக கட்டுப்படுத்தியது. இதனால் 118 ரன்களுக்கு 9 விக்கெட் வீழ்ந்த போதிலும் கடைசி நேரத்தில் இரண்டு சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றி தேடி தந்தார் பாகிஸ்தான் அணியில் பத்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய நசீம் ஷா.
முன்னதாக, இந்தப் போட்டியில் மிடில் ஆர்டரில் இறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஆசிப் அலி 16 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவர் வெளியேறும்போது தன்னை அவுட்டாக்கிய ஃபரீத் அஹமத்திடம் தனது பேட்டை வைத்து அடிப்பதுபோல் மிரட்டினார். இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போதே போட்டி மீதான எதிர்பார்ப்பு ஹைவோல்டேஜில் எகிறியது. இதையடுத்து பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் வெற்றி பெற்றதை தாங்கி கொள்ள முடியாமல் மைதானத்தின் இருக்கைகளை உடைத்து தள்ளினர்.
அதுமட்டுமில்லாமல் அருகில் சிக்கிய பாகிஸ்தான் ரசிகர்களை, இருக்கைகளை புடுங்கி தாக்கியதோடு தூக்கி வீசவும் செய்தனர். இதற்கு பாகிஸ்தான் ரசிகர்களும் பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதலில் ஈடுபட்டனர். மைதானத்தை சுற்றி இருந்த இருநாட்டு ரசிகர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த ஷார்ஜா நகர போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இரு நாட்டு ரசிகர்களும் தாக்குதலில் ஈடுபடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது