U20 Junior Wrestling Championship: தங்கம் வென்ற பிரியா மாலிக் - இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு
முதல் முறையாக உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் நான்கு இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் ஒரு தங்கத்தை 76 கிலோ எடைப்பிரிவில் பிரியா மாலிக் வென்றுள்ளார்.
இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நாடான ஜோர்டானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்களுக்கான 76 கிலோ எடை பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக், ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.
இந்த போட்டியில் பிரியா மாலிக், 5-0 என்ற புள்ளி கணக்கில் லாரா செலிவ் குஹானை முழுமையாக வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இந்த போட்டியில் பிரியா மாலிக்குக்கு இடது கண் அருகே கா யம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. ஆனாலும் அதையும் பொருப்படுத்தாமல் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடி வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டு இந்தியாவின் ஆன்டிம் பங்கல் யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று இருந்தார். தற்போதைய போட்டித் தொடரில் ஆன்டிம் பங்கல், 53 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
இதேபோல் 62 கிலோ எடைப்பிரிவில் சவிதா, 65 கிலோ எடைப்பிரிவில் ஆன்டிம் குண்டு ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் முதல் முறையாக உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் நான்கு இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான ஹர்ஷிதா 72 கிலோ பிரிவில் வெண்கலம் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுகிறார்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆசிய விளையாட்டில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக வளர்ந்து வரும் வீராங்கனையாக இருந்து வரும் ஆன்டிம் பங்கல் இந்த ஆண்டில் இந்தியா சார்பில் ஆசிய விளையாட்டில் பங்கேற்கவுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்