Team India: ‘ஐபிஎல் மட்டும் போதுமா சாரே? எப்போ தான் சாம்பியன் ஆவீங்க?’
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Team India: ‘ஐபிஎல் மட்டும் போதுமா சாரே? எப்போ தான் சாம்பியன் ஆவீங்க?’

Team India: ‘ஐபிஎல் மட்டும் போதுமா சாரே? எப்போ தான் சாம்பியன் ஆவீங்க?’

Stalin Navaneethakrishnan HT Tamil
Jun 12, 2023 04:30 AM IST

இது 120+ கோடி இந்தியர்களின் கனவு. அதற்கு வழிவிடுமா இந்திய கிரிக்கெட் வாரியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா

ஒவ்வொரு துறையிலும் ஒரு உச்சபட்ச இலக்கு இருக்கும். கிரிக்கெட்டில் அப்படி ஒரு இலக்கு தான் உலக கோப்பை. டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான உலககோப்பை போட்டிகள் நடந்து கொண்டே இருக்கும். அதில் வெற்றி பெறும் அணி தான், உலக அரங்கில் சாம்பியன். இந்த போட்டியில் எப்போதும் இந்தியா வெல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு இருக்கிறது. 

ஆனால் அது வெகுசில சமயங்களில் தான் நிறைவேற்றப்படுகிறது. பல நேரங்களில் வீணடிக்கப்படுகிறது. இன்னும் சில நேரங்களில் வெறுப்பேற்ற வைக்கிறது. நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் தோற்ற இந்திய அணியின் செயல்பாடும், வெறுப்பேற்றும் படியாக தான் இருந்தது. 

முதலில் எல்லாரும் சொல்லும் ஒரு வாதம், ‘திருப்தி இல்லாத அணித்தேர்வு’. அது என்னமோ உண்மை தான். உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் அஷ்வினை அணியில் தேர்வு செய்யாததும், சீனியர் என்கிற முறையில் பலர் வாய்ப்பு பெற்றதும் தான், இந்த தோல்விக்கு முக்கிய காரணம். 

பவுலிங்கை பொருத்தவரை இந்திய அணி முடிந்தவரை உழைத்திருக்கிறது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பவுலிங் நன்றாக தான் இருந்தது. பேட்டிங் என்று வரும் போது தான், ஒருவர் கூட சோபிக்கவில்லை. இதில் ரஹானே மட்டும் விதிவிலக்கு. கடைசி நேரத்தில் தேர்வான ரஹானாவின் தேர்வை தவிர வேறு அனைத்து தேர்வுகள் விமர்சனத்திற்குரியது தான். 

தலைக்கு மேல் டெஸ்ட் சாம்பியன் போட்டியை வைத்துக் கொண்டு, ஐபிஎல் களத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தவர்கள் தான், அவசர அவசரமாக இங்கிலாந்து சேர்ந்து, கோப்பையை இழந்திருக்கிறார்கள். இவர்கள் ஒன்றும் திறமைக்கு பஞ்சமானவர்கள் இல்லை. ஆனால் இவர்கள் திறமைகள் ஐபிஎல்., மற்றும் முக்கியத்துவம் இல்லாத போட்டிகளில் தான் வெளிப்படுகிறது. 

ஒரு நாடே எதிர்பார்க்கும் சாம்பியன்ஷிப் போட்டிளில் இவர்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை தொடர்கிறார்கள். இவர்களை நம்பி இனி அடுத்து வரவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை வேறு காத்திருக்கிறது. பொறுப்பில்லாத ஷாட்டுகளை தொடர்ந்து கொண்டிருக்கும் கேப்டன் ரோஹித் உள்ளிட்ட அனைவருமே விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தான். 

வெறுமனே ஐபிஎல் திறமையை காரணம் காட்டி, இவர்கள் தான் இந்தியாவுக்கு இன்னும் ஒரு கோப்பையை தரப்போகிறார்கள் என்கிற எண்ணத்தை, கிட்டத்தட்ட பலரும் அழித்துவிட்டனர். தனிநபர் புகழுக்கு இன்னும் வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நல்ல திறமையாளர்களை முன்னிறுத்தி சிறப்பான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐ.,க்கு உள்ளது. இது 120+ கோடி இந்தியர்களின் கனவு. அதற்கு வழிவிடுமா இந்திய கிரிக்கெட் வாரியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.