T20 world cup semi finals umpires:அரையிறுதியில் இந்தியாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இடம்பெறும் நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ள நிலையில், இந்தியா தோல்வி அடைந்த ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் அம்பயராக இருந்த ரிச்சர்ட் கெட்டில்பரோவும் இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாத அம்பயராக கருதப்படும் ரிச்சர்ட் கெட்டில்பரோ, டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டியில் அவர் இடம்பெறவில்லை. இதனால் மிகவும் ஆறுதல் அடைந்துள்ள ரசிகர்கள், அவர் இந்திய போட்டியில் இடம்பெறாதது இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் நல்ல அதிர்ஷ்டம் என கருத வேண்டும் எனவும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
டி20 உலகக் கோப்பை லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், அரையிறுதி போட்டிகள் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளி்ல் நடைபெறுகின்றன.
முதல் அரையிறுதி நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சிட்னியிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா - இங்கிலாந்து இடையே அடிலெய்டிலும் நடைபெறுகிறது.
இதையடுத்து அரையிறுதி போட்டிகளில் இடம்பெறும் நடுவர்களின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி நியூசிலாந்து - பாகிஸ்தான் மோதும் போட்டியில் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் கள நடுவராகவும், ரிச்சர்ட் கெட்டில்பரோ மூன்றாவது நடுவராகவும் செயல்படவுள்ளனர்.
மைக்கேல் கோக் நான்காவது நடுவராகவும் மற்றும் கிறிஸ் பிராட் போட்டி நடுவராகவும் (ரெப்ரீ) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டியில் குமார் தர்மசேனா மற்றும் பால் ரீபெல் ஆகியோர் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேவ்னி மூன்றாவது நடுவராகவும் செய்லபடவுள்ளனர்.
நான்காவது நடுவராக ராட் டக்கர் செயல்படுவார். டேவிட் பூன் போட்டி நடுவராக (ரெப்ரீ) இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடுவர்களில் ரிச்சர்ட் கெட்டில்பரோ இடம்பெறும் ஐசிசி போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் கூட தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர்கள் அம்பயராக செயல்பட்டார்.
இந்தப் போட்டியில் இந்தியா அணி தோல்வியை தழுவியது. அத்துடன் இந்த தொடரில் இதுவரை இந்தியா பெற்றுள்ள ஒரே தோல்வியாகவும் அந்தப் போட்டி அமைந்தது.
இதையடுத்து இந்தியாவுக்கு எதிராக எந்த அணி களமிறங்கவுள்ளது என்பதைகாட்டிலும், யார் அம்பயராக செயல்படவுள்ளனர் என்பது ரசிகர்களின் ஆவலாக இருந்தது.
இதைத்தொடர்ந்து ரிச்சர்ட் கெட்டில்பரோ இந்தியாவுக்கான போட்டியில் அம்பயரிங் செய்யவில்லை என்ற தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளதோடு மட்டுமில்லாமல், இந்தியாவுக்கு போட்டி தொடங்கும் முன்னரே அதிர்ஷ்ட காற்று வீசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
டாபிக்ஸ்