T20 world cup: இனி எளிதில் வீழ்த்தும் அணியில்லை நாங்கள்! வங்கதேசம் மெசேஜ்
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவை பொறுத்தவரை கேஎல் ராகுல் கம்பேக், அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பினிஷ், அசத்தல் பீல்டிங் போன்றவை வெற்றிக்கு வழிவகுத்திருந்தாலும், இந்தியாவை ஈஸியாக ஜெயிக்க விடாமல் அப்செட் செய்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் வங்கதேச அணியனர் வெளிப்படுத்தினர்.
இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணியை இன்னும் ஒரு முறைகூட ஐசிசி தொடர்களின் இறுதிபோட்டி வரை கூட தகுதி பெறாத வங்கதேசம் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் இரண்டாவது முறையாக வெற்றிக்கு அருகே வந்து தோல்வி அடைந்துள்ளது வங்கதேசம். இது அணி நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை காட்டுவதோடு, இந்தியா அணிக்கான எச்சரிக்கையாகவே பார்க்கவே வேண்டும்.
ஏனென்றால் வலிமை மிக்க இந்திய அணியை கடினமாகவும், நெருக்கடியுடன் கடைசி பந்து வரை காத்திருக்க வைத்ததையே வங்கதேசம் வெற்றி பெற்றதற்கு சமமாக கருத வேண்டும். இதன்மூலம் அடுத்தமுறை வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டம் என்பது இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கான பரபரப்பு இருப்பதை போன்றுகூட மாறலாம்.
கடந்த 2016ஆம் ஆண்டில் கை மேல் இருந்த வெற்றி வாய்ப்பை தோனி தலைமையிலான இந்திய அணிக்கு தாரை வார்த்து கொடுத்தது வங்கதேசம்.
3 பந்துகளில் 2 ரன்கள் கூட எடுக்கமுடியாமல் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த முறை அவ்வாறு இல்லாமல் மிகவும் பக்குவப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரையிலும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது.
20 ஓவரில் 200 ரன்களுக்கு மேல் செல்ல இருந்த இந்தியா பேட்ஸ்மேன்களின் வேகத்தை தேர்ந்த பெளலிங், பீல்டிங் மூலம் 184 என கட்டுப்படுத்தியபோதே வெற்றிக்கான பாதையில் அணியினர் பயணிக்க தொடங்கிவிட்டனர்.
பார்ப்பவர்களுக்கு 185 ரன்கள் சேஸ் என்பது மிகவும் பெரிதாக தோன்றினாலும் சேஸ் தங்களது கட்டுக்குள்ளே இருக்க வைக்க தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்ஸர்கள் மூலம் இந்திய பெளலர்களை அட்டாக் செய்தார் லிட்டன் தாஸ். அவரது ஆட்டத்துக்கு பிட்ச்சும் நன்கு கைகொடுத்தது. முன்னணி பெளலர்களையும் லிட்டன் தாஸ் விட்டுவைக்காமல், அணியின் ஸ்கோர் 54 என இருந்தபோது 21 பந்துகளில் அதிகவேக அரைசதம் அடித்தார். முதலில் பேட் செய்ததை விட இரண்டாவது பேட்டிங் செய்தவர்களுக்கு வசதியாக பந்து நன்கு எழும்பி வந்தது இந்த அதிரடி ஆட்டத்துக்கு காரணமாக அமைந்தது.
பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. அப்போது 19 ரன்கள் இந்தியாவை விட முன்னிலை பெற்று இருந்தது வங்தேசம்.
மழை குறுக்கீடு என்பது வங்கதேசத்துக்கு வேகத்தடையாகவே அமைந்தது. அந்த மழை அப்படியே விடாமல் தொடர்ந்திருந்தால் அந்த இடத்தில் வங்கதேசம்தான் வெற்றி பெற்று இருக்கும். ஆனால் என்னவோ இந்தியா ஜெயிக்க வேண்டும் என இயற்கையும் திட்டமிட்டதுபோல் தான் சிறப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தை சிறிது நேரம் சீர்குலைத்து, இந்தியாவுக்கான மற்றொரு வாய்ப்பை வழங்கியது.
மழையால் கிடைத்த வாய்ப்பை இந்திய அணியனர் பயன்படுத்தினாலும் வெற்றிக்காக கடைசி பந்து வரை காத்திருக்க வைத்ததில் வங்கதேச பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இருந்தது. வழக்கமாக இந்தியா போன்ற டாப் கிளாஸ் அணிகளில் பேட்டிங், பெளலிங், பீல்டிங் என ஏதாவது ஒன்று அடிப்படையாகவே சிறப்பாக அமைந்துவிடும். அந்த விஷயம்தான் வெற்றிக்கான காரணியாகவும் அமைந்திருக்கும்.
அந்த வகையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மூன்று ஆட்டங்களாக சொதப்பி வந்த கேஎல் ராகுல் அதிரடியாக அரைசதம் விளாசியது ஒரு புறம் என்றால், பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் கட்டுப்பாடான பெளலிங், முக்கியமாக எந்த கேட்சையும் இந்தியா வீரர்கள் தவறவிடாமல் பிடித்தது அதிர்ஷ்டம் எந்த ரூபத்திலும் வங்கதேசம் பக்கம் எட்டி பார்க்காமல் போய்விட்டது.
இருப்பினும் கடந்த 2016 டி20 உலகக் கோப்பை போல் இந்த ஆண்டிலும் கடைசி வரை விடா முயற்சி செய்தனர். போட்டிக்கு முன்பு வங்கதேச கேப்டன் ஷகீப் அல்ஹசான் சொன்னதுபோல் இந்தியாவுக்கு உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என நெருக்கடி உள்ளது, ஆனால் இந்தியாவை அப்செட் செய்ய வேண்டும் என்ற வங்கதேச அணியினர் தங்களது நோக்கத்தை சரியாகவே செயல்படுத்தினர். ஒரு புறம் விக்கெட் சரிவுகள் இருந்தாலும், மறுபக்கம் இலக்கை நோக்கிய பயணம் எந்த வித சமரசமும் இன்றி வெளிப்பட்டது.
வங்கதேசத்தின் இப்படியொரு ஆட்டம் சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா என்கிற வசனம் இந்திய வீரர்களுக்கு சால பொருத்தமாகவே அமைந்தது. 2007ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்தியாவை அப்செட் செய்தபோதே, நாங்கள் எளிதாக வீழ்த்திவிடும் அளவு சாதாரண அணியில்லை என்பதை சொல்லாமல் செயலில் வெளிப்பட்டுத்தினர். இன்றளவும் அதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இரண்டு முறை வெற்றியின் விளிம்பு வரை சென்று தோல்வியை சந்தித்த அணி அடுத்தமுறை இப்போது சொன்னது போலவே முழு வலிமையுடன் எந்நேரமும் அப்செட் செய்யலாம். அந்த வகையில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற முன்னணி அணிகளுக்கு எதிராக விளையாடும் சூழல் வங்கதேசத்து எதிராகவும் விளையாடும் போட்டியும் இணைத்து கொள்ளும் விதமாக இந்தியாவுக்கு அமைந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் கம்பேக், அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பினிஷ், பீல்டிங் ஆகியவற்றை குறிப்பிடும்படியாக கூறலாம். இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் கேஎல் ராகுல் பார்முக்கு திரும்பியது இந்திய பேட்டிங் வரிசையை வலிமைப்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் தொடக்க பெளலராக சிறப்பாக செயல்பட்டு வந்த இளம் வீரரான அர்ஷ்தீப் சிங்கிடம், இந்த முறை ஆட்டத்தை கட்டுப்பாடான பெளலிங் மூலம் பினிஷிங் செய்யும் பணி வழங்க்கப்பட்டது. நெருக்கடி மிகுந்த அந்த தருணத்தை சிறப்பாகவே கையாண்ட அர்ஷ்தீப், விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் ரன் விட்டுக்கொடுக்காமலும், பதட்டத்தில் வைடு, நோபால் போன்ற உதரிகள் போடாமலும் கட்டுப்பாடுடனே பந்து வீசினார்.
இந்த ஆட்டத்தில் பரிதாபத்துக்குரிய நபராக இருந்தது தினேஷ் கார்த்திக் மட்டும்தான். பின்ஷரான அவர் கடைசி 10 முதல் 15 பந்துகள் ஆடுவதற்காகதான் அணியில் சேர்க்கப்பட்டார் எனக் கூறப்பட்டாலும், இந்தப் போட்டியில் கடைசி 5 ஓவர் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துர்தஷ்டவசமாக ரன்அவுட்டாகி வெளியேறினார்.
அவரது ரன்அவுட்டும் சர்ச்சையாக அமைந்திருந்த போதிலும் அதைப் பற்றி யாரும் கண்டுகொல்லாமல் போனது வேதனையான விஷயம்தான். மொத்தத்தில் இந்தப் போட்டியை இந்தியாவை ஈஸியாக ஜெயிக்க விடாமல் அப்செட்டாக்கவதற்கான முழு சாத்தியக்கூறுகளையும் வங்கதேச வீரர்கள் வெளிப்படுத்தினர். ஒருவேளை மழை வராமல் இருந்திருந்தால் சொன்னதை செய்தும் இருப்பார்கள் வங்கப்புலிகள்.
டாபிக்ஸ்