T20 world cup 2022: டி20 உலகக்கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன்
மெல்போர்ன்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இன்று (நவ.13) மோதின. மெல்போர்னில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு மொஹமது ரிஸ்வான், பாபர் அசாம் ஜோடி தொடக்கம் கொடுத்தது. ரிஸ்வான் 4வது ஓவரில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களில் அவுட்டாகினார். ஷான் மசூத் தனது பங்கிற்கு 38 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அபாரமாக பந்து வீசியது.
இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத், கிரிஷ் ஜோடன் தலா 2 விக்கெட்டுகளையும், பென்ஸ்டோக்ஸ் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் பட்லர் 26 ரன்களிலும், ஹாரி புரூக் 20 ரன்களிலும் அவுட்டாகினர்.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஜோடி அபாரமாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மொயின் அலி 19 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 138 ரன்களை எடுத்து வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்